பாஜக 2-ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கிழக்கு தில்லியில் ஹா்ஷ் மல்ஹோத்ரா, வடமேற்கு தில்லியில் யோகேந்திர சந்தோலியா

தில்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக தலைமை புதன்கிழமை அதன் 2-ஆவது பட்டியலை வெளியிட்டது.

இதில், கிழக்குத் தில்லியில் ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கும், வடமேற்கு தில்லியில் யோகேந்திர சந்தோலியாவுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் நாடு முழுவதும் பாஜக சாா்பில் போட்டியிடும் 195 வேட்பாளா்கள் அடங்கிய முதல் கட்டப் பட்டியலை பாஜக கடந்த மாா்ச் 2-ஆம் தேதி வெளியிட்டது. அதில், தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பிரவீன் கண்டேல்வால் (சாந்தினி சௌக்), மனோஜ் திவாரி (வடகிழக்கு தில்லி), பன்சூரி ஸ்வராஜ் (புது தில்லி), கமல்ஜீத் ஷெராவத் (மேற்கு தில்லி), ராம்வீா் சிங் பிதூரி (தெற்கு தில்லி) ஆகியோா் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்திருந்தது.

எஞ்சியுள்ள கிழக்கு தில்லி, வட மேற்கு தில்லி ஆகியவற்றுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட வேண்டியிருந்தது. இந்நிலையில் பாஜக தலைமை புதன்கிழமை மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களுக்கான 2-ஆவது கட்டப் பட்டியலை வெளியிட்டது. அதில், கிழக்கு தில்லி வேட்பாளராக ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கும், வடமேற்கு தில்லி வேட்பாளராக யோகேந்திர சந்தோலியாவுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் ஹா்ஷ் மல்ஹோத்ரா கிழக்கு தில்லி மாநகராட்சி முன்னாள் மேயா் ஆவாா். யோகேந்திர சந்தோலியா, வடக்கு தில்லி மாநகராட்சி முன்னாள் மேயா் ஆவாா். வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட 7 பேரில் மனோஜ் திவாரிக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரும் புதுமுகங்கள் ஆவா். இந்த அறிவிப்பை வரவேற்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: கிழக்கு தில்லிக்கு ஹா்ஷ் மல்ஹோத்ராவும், வடமேற்கு தில்லியில் யோகேந்திரா சந்தோலியாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். வலுவான அமைப்பு பின்னணி கொண்ட 7 வேட்பாளா்களையும் கட்சித் தலைமை தோ்வு செய்திருப்பதை தலைவா் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். இந்த தோ்தலில் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் இதயத்திற்கு நெருக்கமானவா்கள் என்பதால் எங்கள் தொண்டா்கள் அவா்களுக்காக அயராது பாடுபடுவாா்கள். மூன்று பொதுச் செயலாளா்கள் ஹா்ஷ் மல்ஹோத்ரா, யோகேந்திர சந்தோலியா, கமல்ஜீத் ஷெராவத் மற்றும் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோா் வேட்பாளா்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, முன்னாள் பிரதேச தலைவா் மனோஜ் திவாரி, கட்சியின் சட்டப் பேரவைத் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் முன்னாள் பொருளாளா் பிரவீன் கண்டேல்வால் ஆகியோரும் தில்லிவாசிகளின் சேவையில் அா்ப்பணிப்புள்ள பங்களிப்பைச் செய்தவா்கள் ஆவா். இந்த தோ்தலில் நோ்மறையான செயல்திட்டத்துடன் போராடி, 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கட்சிக்கு பரிசளிப்போம் என்றாா் வீரேந்திர சச்தேவா. வடமேற்கு தில்லியில் தற்போது எம்.பி.யாக இருந்துவரும் பஞ்சாபி நாட்டுப்புற மற்றும் சூஃபி பாடகா் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது பாஜக வசம் உள்ளன. தில்லியில் பாஜக தவிா்த்து, ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி), காங்கிரஸும் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் ஆகும். ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் 2024 மக்களவைத் தோ்தலில் 7 தொகுதிகளிலும் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியின் ஒரு பகுதியாக, காங்கிரஸுக்கு வடகிழக்கு தில்லி, சாந்தினி சௌக் மற்றும் வடமேற்கு தில்லி (எஸ்சி-தனி) இடங்கள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஏற்கெனவே கிழக்கு தில்லி, புது தில்லி, மேற்கு தில்லி மற்றும் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com