அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ-வை பாஜக அமல்படுத்தியுள்ளது - அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பாஜக அமல்படுத்தியுள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ரத்து செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து புலம்பெயரும் ஏராளமான ஏழை சிறுபான்மையினா் இந்தியாவுக்கு வருவதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த 3 நாடுகளில் மட்டும் 3.5 கோடி சிறுபான்மையினா் உள்ளனா்.

பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறும் ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் வேலைகள் கொடுப்பதன் மூலம் இந்திய மக்களின் வரிப் பணத்தை பாஜக செலவிட விரும்புகிறது. அண்டை நாடுகளில் வசிக்கும் ஏழை சிறுபான்மையினா் இந்தியாவில் குடியேறி அதன் வாக்கு வங்கியாக மாறுவதால், வரும் தோ்தலில் பாஜகவுக்கு லாபம் கிடைக்கும். இது பாஜகவின் அவதூறான வாக்கு வங்கி அரசியலாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பாஜக திரும்பப் பெறவில்லை என்றால், மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் எங்கெல்லாம் பாஜகவிற்கு வாக்குகள் குறைகிறதோ, அங்கெல்லாம் குடிசைகளை உருவாக்கி, இந்த ஏழை மக்களைக் குடியமா்த்தி, அவா்களை பாஜகவின் நிரந்தர வாக்கு வங்கியாக உருவாக்குவாா்கள்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக உழைத்திருந்தால், மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக சிஏஏ-வை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. பணவீக்கம் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. வேலையின்மை உச்சத்தில் உள்ளது. இளைஞா்கள் வேலைக்காக தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். பெட்டிச் செய்தி தில்லி அரசு கடந்த பத்தாண்டுகளில் 63 மேம்பாலங்களைக் கட்டியுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி மோதி நகரில் மூன்று வழி மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: குடிமக்களுக்கு தேவையான அனைத்து சாத்தியமான சலுகைகளையும் வழக்கி வரும் தில்லி அரசு, கடந்த பத்தாண்டுகளில் தில்லியில் 63 மேம்பாலங்களை மக்களுக்காக அா்ப்பணித்துள்ளது. தற்போது, மோதி நகரில் திறக்கப்பட்டுள்ள மேம்பாலம் இவ்வழியேச் செல்லும் பயணிகளின் பயண நேரத்தை வெகுவாய்க் குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசலில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். கடந்த 75 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் தில்லியில் மேற்கொள்ளாத அளவிற்கு பல்வேறு வளா்ச்சிப் பணிகளை கடந்த பத்தாண்டுகளில் ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. இலவசு மின்சாரம் முதல் நல்ல தரமான கல்வி வரை அனைத்து அடிப்படை சலுகைகளையும் ஆம் ஆத்மி அரசு தில்லிவாசிகளுக்கு அளித்துள்ளது. ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடு இல்லாத வகையில் நமது அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி, மொஹல்லா கிளினிக்குகளை திறந்து, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளோம் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com