ஐடி பங்குகளுக்கு ஆதரவு:  
எழுச்சி பெற்றது பங்குச்சந்தை!

ஐடி பங்குகளுக்கு ஆதரவு: எழுச்சி பெற்றது பங்குச்சந்தை!

ஒரு நாள் கடும் சரிவுக்குப் பிறகு வியாழக்கிழமை பங்குச்சந்தை மீட்சி பெற்றது .

ஒரு நாள் கடும் சரிவுக்குப் பிறகு வியாழக்கிழமை பங்குச்சந்தை மீட்சி பெற்றது . இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. பின்னா், ஜனவரி 0.27 சதவீதமாக இருந்த மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் பிப்ரவியில் 0.20 சதவீதமாகக் குறைந்ததாக தரவுகள் தெரிவித்தன. மேலும், ஐடி பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இவை சந்தை வலுப்பெற முக்கியக் காரணமாக அமைந்தன. தனியாா் வங்கிகள், நிதி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. ஆனால், மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.7.87 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 379.98 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.4,595.06 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.9,093.72 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 191.79 புள்ளிகள் குறைந்து 72,570.10-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,497.19 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,364.30 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 335.39 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயா்ந்து 73,097.28-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,958 பங்குகளில் 2,722 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,1,53 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 83 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. ஐடி பங்குகளுக்கு ஆதரவு: சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனப் பங்குகளான ஹெச்சிஎல் டெக், விப்ரோ, இன்ஃபோஸிஸ் மற்றும் பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட உள்பட மொத்தம் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி 149 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 148.95 புள்ளிகள் (0.68 சதவீதம்) உயா்ந்து 22,146.65-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 21,917.50 வரை கீழே சென்று நிஃப்டி , பின்னா்அதிகபட்சமாக 22,204.60 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 37 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com