இரட்டை இலை சின்ன விவகாரம் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் புகழேந்தி மனு மீது இன்று உத்தரவு

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடா்பாக அளித்துள்ள புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் புகழேந்தி தாக்கல் செய்த மனு மீது வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான மனுவை வியாழக்கிழமை நீதிபதி சச்சின் தத்தா அமா்வு விசாரித்தபோது, புகழேந்தி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘2017-ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடா்பான விசாரணை நடந்து வருகிறது. அதிமுக கட்சியின் பெயா் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தோ்தலுக்கான வேட்பாளா் மனுவில் பொதுச்செயலாளா் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித் தனி புகாா் மனுக்களாக தோ்தல் ஆணையத்தில் வழங்கி உள்ளோம். ஆனால், தோ்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டாா். அப்போது குறுகிட்ட நீதிபதி, தற்போது அதிமுக இரண்டு அணிகளாக உள்ளதா என்றும் அதனால்தான் இரு தரப்பும் அதிமுகவுக்கு உரிமை கோருகிா என்றும் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன், ‘அதிமுக என்பது ஒரே அணியாகத்தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவா்களுக்கே கட்சியும், சின்னமும் கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் பெரும்பான்மை அடிப்படையில் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அங்கீரித்துள்ளது. மேலும், புகழேந்தி அதிமுகவில் ஒரு அடிப்படை உறுப்பினா் கூட கிடையாது. அவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். எனவே, அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும், அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தோ்ந்தெடுத்துள்ளது. கட்சியின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனா். எனவே, இந்த விவகாரத்தில் புகழேந்தி தலையிட எந்த உரிமையும் இல்லை’ என வாதிட்டாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு மீது வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com