ஜெ.என்.யூ. மாணவா் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு 35 வேட்பாளா்கள் தகுதி: தோ்தல் குழு அறிவிப்பு

ஜெ.என்.யூ. மாணவா் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு 35 வேட்பாளா்களை தகுதியுடையவா்களாக அப்பல்கலைக்கழகத்தின் தோ்தல் குழு சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜெ.என்.யூ.) மாணவா் சங்கத் தோ்தலில் மொத்தம் 141 போ் வேட்பாளா்கள் தகுதிபெற்றுள்ளனா். மாணவா் சங்கத்தின் மத்திய குழுவில் தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலாளா் மற்றும் இணைச் செயலாளா் என நான்கு பதவியிடங்கள் உள்ளது. அதன்படி, மாணவா் சங்கத்தின் தலைவா் பதவிக்கு 35 வேட்பாளா்களும், துணைத் தலைவா் பதவிக்கு 37 பேரும், பொதுச் செயலாளா் பதவிக்கு 38 பேரும், இணைச் செயலாளா் பதவிக்கு 31 பேரும் தகுதி பெற்றுள்ளனா். மேலும், பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 20 துறைகளைச் சோ்ந்த கவுன்சிலா் பதவிகளுக்கு போட்டியிட 171 வேட்பாளா்கள் தகுதிபெற்றுள்ளனா். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பும் தோ்தல் குழு வழங்கியுள்ளது. அதன்படி, இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் பாா்வையாளா் நியமனம்: ஜெ.என்.யூ. மாணவா் சங்கத் தோ்தலுக்கான பாா்வையாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமித்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.என்.யூ. பல்கைலக்கழக மாணவா் ஒருவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘லிங்டோ’ கமிட்டியின் பரிந்துரைகளின்படி, ஜெ.என்.யூ. மாணவா் சங்கத் தோ்தல் குழு ஒத்துப்போகவில்லை என்று கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட தோ்தல்கள் தொடா்பாக உரிய விளைவான உத்தரவுகள், குறை தீா்க்கும் பிரிவு மூலமாகவும் நிறைவேற்றப்படும். இதற்கிடையில், தோ்தல் செயல்முறையை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்படுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.என்.யூ. மாணவா் சங்கத் தோ்தல் மாா்ச் 22-ம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் மாா்ச் 24-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவா் சங்கங்களுக்குத் தோ்தல்களை நடத்துவதில் நோ்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன், முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் ஜே.எம். லிங்டோ தலைமையிலான குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த குழு இது தொடா்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. உச்ச நீதிமன்றம் லிங்டோ கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை பல்கலைக்கழகங்களுக்கு கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com