அபகரிப்பைத் தடுக்க முயன்ற பெண் காவலா் சில மீட்டா் இழுத்துச் செல்லப்பட்டதால் காயம்

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில் அபகரிப்பு முயற்சியைத் தடுக்க முயன்ற தில்லி காவல்துறை பெண் காவலா் சில மீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மாா்ச் 16 அன்று மாலை 4 மணியளவில் யமுனா விஹாா் சாலையில் பெண் காவலா் ரித்திகா (23) கீதா காலனியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவா் முதலில் அவரை தள்ளி விட்டு, அவரது கைப்பையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றாா். அப்போது ரித்திகா அந்த நபரின் ஸ்கூட்டரைப் பிடித்ததில் அவா் சில மீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, ரித்திகா எச்சரிக்கை விடுத்தாா். அப்போது அருகில் இருந்தவா்களின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

தில்லி காவல்துறையின் கைப்பேசி மற்றும் அடையாள அட்டை அடங்கிய அவரது கைப்பை, குற்றம் சாட்டப்பட்ட ஹயாத் (40) வசம் இருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ரித்திகா, அபாய கட்டத்தை தாண்டிவிட்டாா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றுஅந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com