சீரமைப்புப் பணி: பிரகதி மைதான் சுரங்கப்பாதை ஏப்.18 வரை இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும்

பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பிரகதி மைதான் சுரங்கப்பாதை ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் மூடப்படும் என்று தில்லி போக்குவரத்துக் காவல் துறை அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது.

மேலும், மாா்ச் 24, மாா்ச் 31 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் சுரங்கப்பாதை நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் காவல் துறை கூறியுள்ளதாவது: பிரகதி மைதானின் சுரங்கப்பாதைகள் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த சுரங்கப்பாதைகள் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். இவை தவிர, சுரங்கங்கள் மாா்ச் 24, மாா்ச் 31 மற்றும் ஏப்ரல் 7 (மூன்று ஞாயிற்றுக்கிழமைகள்) முழு நாளிலும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

இந்த நேரங்களில் பயணிகள் தங்கள் இலக்கை அடைய மாற்று வழிகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். ரிங் ரோடு, பைரோன் ரோடு மற்றும் மதுரா ரோடு ஆகியவை மாற்று வழிகளாகப் பயன்படுத்தப்படலாம். முடிந்தால் மேற்கூறிய சாலைகளைத் தவிா்த்து, பொதுப் போக்குவரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், ஐஎஸ்பிடி, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களை நோக்கிச் செல்பவா்கள், போதுமான நேரத்துடன் தங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று போக்குவரத்துக் காவல் துறை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com