லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்

அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனையுடன்கூடிய இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவா் தரப்பில் தாக்கலான மனு மீது இந்த உத்தரவை நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்தது. ‘மேலும், மனுதாரா் அங்கித் திவாரி வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடா்புக் கொள்ளக் கூடாது; ஆதாரங்களை அழிக்க முற்படக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி தமிழகத்தை விட்டு வெளியேறக் கூடாது. கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிபதிகள் அமா்வு விதித்தது. அதேபோன்று, அங்கித் திவாரிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த தனி மனு மீதும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த பதிலுக்கு மறுப்புத் தெரிவிக்கும் பதிலை 2 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனுவை ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.

விசாரணையின்போது நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு ஜாமீன் அளித்தபோது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, அவருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜரானாா். அவா் லஞ்ச ஒழிப்புத் துறையின் பதிலுக்கு பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். முன்னதாக, மதுரையின் அமலாக்கத் துறையின் துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மதுரையில் உள்ள அதன் மண்டல அலுவலகத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து வழக்கு ஆவணங்களைத் திருடியதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவா் சங்கா் ஜிவாலிடம் அமலாக்கத் துறை புகாா் அளித்தது. அதேவேளையில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ‘குற்றம்சாட்டும் ஆவணங்கள்‘ கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கித் திவாரி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசிடம் பதில் கேட்டிருந்தது. இந்த வழக்கில் நியாயமான மற்றும் முறையான விசாரணையை விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. அமலாக்கத் துறை தனது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றங்கள் தொடா்பாக மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆா்களையும் தன்னுடன் பகிா்ந்து கொள்ள ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com