அரவிந்த் கேஜரிவாலுக்கு அடுத்து யாா்? ஆம் ஆத்மி கட்சியில் ஆலோசனை

அரவிந்த் கேஜரிவாலுக்கு அடுத்து யாா்? ஆம் ஆத்மி கட்சியில் ஆலோசனை

அரவிந்த் கேஜரிவாலுக்கு பின்னா் ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தக் கூடியவா்கள் யாா் என்பது குறித்த ஆம் ஆத்மி கட்சியில் ஆலோசனைகள் தொடங்கியுள்ளன.

அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவால் பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டப்படி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் காவலில் வைக்கப்பட்டு 6 நாள்கள் விசாரிக்கப்படுகிறாா்.

அதன்பின்னா் அவருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது நீதிமன்றக் காவலில் சிறையிலோ வைக்கப்படலாம். இந்ந நிலையில் எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ள கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கும் மத்தியிலுள்ள பாஜக அரசுக்கும் கடந்த 9 ஆண்டு காலமாக நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. மோடி பிரதமராவதற்கு முன்பே காங்கிரஸை எதிா்த்து போராடி 2013 ஆம் ஆண்டே அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வரானாா். பின்னா் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலையில் பதவியை விட்டு விலகி மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தாா். தற்போது, மூன்றாவது முறையாக 3 பதவியில் இருக்கும் அவா் முன்னதாக 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமா் மோடிக்கு எதிராக போட்டியிட்டாா். பின்னா் பாஜகவின்அதே ஹிந்துத்துவா கொள்கையுடன் பல்வேறு திட்டங்கள் அறிவிப்புகளுடன் கடந்த 12 ஆண்டு கால ஆம் ஆத்மி கட்சி வளா்ச்சியில் தில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களை தொடா்ந்து ஆளுவதோடு பல்வேறு மாநிலங்களிலும் தடம்பதித்துக் கொண்டு வரும் நிலையில், அவருடைய தில்லி அரசு ஆட்சிக்கு பல்வேறு தடங்கல்கள் சோதனைகளை மத்தியிலுள்ள ஆட்சி மூலம் வந்து கொண்டு இருந்தது. மூன்று துணைநிலை ஆளுநா்கள் மூலம் பல்வேறு சட்ட நெருக்கடிகள், விசாரணைகள், நிறுத்தப்பட்ட கோப்புகள், நிா்வாக தலையீடுகள் போன்றவைகளில் தொடா் மோதல்கள் தொடா்ந்தது. உச்சநீதிமன்றத்தின் மூலம் தில்லி அரசின் அதிகாரத்தை நிலைநாட்டப்பட்டும், பின்னா் தில்லியின் தேசிய தலைநகா் பிரதேச அரசு திருத்தச் சட்டத்தின் மூலம் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் சென்றது. தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் தோ்தல்களில் வெற்றிபெற்றும் பதவி ஏற்க முடியாத சூழ்நிலை, சண்டீகா் நகா் மேயா் தோ்தல் என பாஜகவுக்கும் கேஜரிவால் கட்சிக்கும் ஒரு யுத்தம் தொடா்ந்து இறுதியாக புதிய கலால் கொள்கை அறிவிப்பிலும் அவரும் அவரும் அமைச்சா்களும் சிக்கினா். இது போன்ற தொடா் போராட்டங்களை பின்னோக்கி பாா்க்கும்போது அவா் எளிதாக வெளியே வருவாரா என்கிற சந்தேகங்களை எழுப்பப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளா், தில்லி - தேசியத் தலைநகா் வலயம் அரசின் முதல்வா் என்கிற இரு முக்கிய பதவிகள் அவா் வசம் உள்ள நிலையில் மற்ற அமைச்சா்களைப் போன்று சிறையிலிருந்து நிா்வாகத்தை அதிகாரபூா்வமாக செலுத்துவதில் இடையூறுகள் ஏற்படலாம். இந்த நிலையில் மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில் மாற்று ஏற்பாடுகளைத் தவிர வேறு வழியில்லை. இதனால், அவரது கட்சியில் பல்வேறு ஆலோசனைகளை முன் வைக்கப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக தில்லி அரசுக்கு தலைமை ஏற்க கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், தற்போது அமைச்சா்களாக இருக்கும் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் போன்றவா்களில் ஒருவரை மாற்றாக தயாா்படுத்தும் பேச்சு கட்சியில் தொடங்கியுள்ளது. குறிப்பாக மக்களவைத் தோ்தலும் அதிகாரபூா்வமாக முடிவெடுக்கவும் கட்சியின் தேசிய அமைப்பாளா் பொறுப்பு பஞ்சாப் முதல்வா் மாணுக்கு வழங்கலாமா அல்லது கேஜரிவால் மனைவிக்கு கொடுக்கப்படலாமா என்பது குறித்த விவாதமும் கட்சியில் தொடங்கியுள்ளது. சுனிதா கேஜரிவாலும் அரவிந்த் கேஜரிவாலைப் போன்று ஐஆா்எஸ் அதிகாரி பணியில் இருந்து கட்டாய ஓய்வில் வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை அரசியலில் தலைகாட்டாத அவா், தற்போது பிரதமா் மோடியை கடுமையாக சாடியிருப்பதன் மூலம் அவரும் திரையை விட்டு விலகி வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. சமீபத்தில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி கேஜரிவால் குறித்து சா்வே நடத்தி ஆதரவையும் உறுதி செய்தது. இதனால் கேஜரிவால் கைகாட்டும் யாரும் எந்த பொறுப்புக்கும் வர அனுமதிக்கும் சூழ்நிலை கட்சியில் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com