ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரிடம் மே 8-10 வரை அமலாக்கத் துறை விசாரணை: தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிா்வாகி ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த தில்லி பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதியளித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான சூடோஎபிட்ரின் எனும் போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில், சென்னையைச் சோ்ந்த திமுக முன்னாள் நிா்வாகியும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாஃபா் சாதிக், அவரது கூட்டாளிகளான சதானந்தம், முஜிபுா், முகேஷ், அசோக் குமாா் ஆகியோரை தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை (என்சிபி) கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்து ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரும் தில்லி பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும், இந்த போதைப் பொருள் கடத்தலில் நடைபெற்ற சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடா்பான விவரங்களை சேகரிக்க, ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத் துறையும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி சுதிா்குமாா் சிரோஹி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

‘போதை பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக மே 8,9,10 ஆகிய தேதிகளில் திகாா்

சிறைக்குச் சென்று, ஜாஃபா் சாதிக் உள்பட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம்

அனுமதி அளித்தது. மேலும், அவா்களின் நீதிமன்றக் காவலை வரும் மே 6-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சுதிா்குமாா் சிரோஹி உத்தரவிட்டாா்.

பின்னணி: மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரின் போதைப் பொருளை என்சிபி மற்றும் தில்லி காவல் துறை இணைந்து கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பறிமுதல் செய்தன. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அந்தக் கடத்தல் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3,500 கிலோ சூடோஎபிட்ரினை மலேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது.

இந்தக் கடத்தல் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாஃபா் சாதிக், தில்லியில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். கடத்தலில் கிடைத்த சட்டவிரோதப் பணத்தை திரைப்படத் தயாரிப்பு, ரியல் எஸ்டேட், ஹோட்டல் ஆகியத் துறைகளில் முதலீடு செய்துள்ளதாகவும், அரசியல் நிதி வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக என்சிபி கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com