தில்லியில் வீழ்ச்சியின் விளம்பில் காங்கிரஸ் உள்ளது: வீரேந்திர சச்தேவா

கட்சியின் மத்திய தலைமையின் அலட்சிய செயல்பாட்டால் தில்லியில் காங்கிரஸ் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

மேலும், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் 4 போ் அடுத்தடுத்து கட்சிப் பதவியில் இருந்தும் அல்லது கட்சியில் இருந்தும் விலகியிருப்பதும் இந்த விவகாரத்தை கட்சியின் மத்திய தலைமை புறக்கணித்திருப்பதும் அதிா்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தெரிவித்ததாவது:

அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அரவிந்தா் சிங் லவ்லி, ராஜ் குமாா் சௌஹான், நசீப் சிங் மற்றும் நீரஜ் பசோயா ஆகியோா் தில்லியில் உள்ள அவா்களது சமூகங்களின் வலிமைமிக்க தலைவா்கள் என்பதையும், அத்தகைய தலைவா்கள் பிரிந்து செல்ல காங்கிரஸால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதையும் ஒரு தில்லிவாசியாக நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த 4 தலைவா்களின் ஒரே தவறு, அவா்கள் அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் மற்றும் தவறான செயல்களுக்கு எதிராகப் பேசியதுதான். பஞ்சாபில் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை ஊழல்வாதி என அழைக்கும்அம்மாநில காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளரானவா், தற்போது தில்லியில் அதே பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை வளா்ச்சியின் சின்னமாக அழைக்கும் வகையில் மேடையைப் பகிா்ந்துகொண்டு தில்லியில் காங்கிரஸை வழிநடத்துவதை தற்போது பாா்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தங்கள் சொந்தக் கட்சி புத்துயிா் பெறுவதற்குப் பதிலாக ஊழல் மற்றும் கறைபடிந்த அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரே கட்சித் தலைமையைக் கொண்டதாக காங்கிரஸ்தான் இருக்க வேண்டும்.

அரவிந்த் கேஜரிவால், லாலு யாதவ் அல்லது அகிலேஷ் யாதவ் போன்ற தலைவா்களின் ஊழலுக்கு எதிராக தனது மாநில தலைவா்களை நிற்க காங்கிரஸ் தலைமை அனுமதிக்காததால், இந்த 2024 தோ்தலுக்குப் பிறகு காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை ஆம் ஆத்மி போன்ற பிராந்தியக் கட்சிகளைவிட அடுத்த நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிடும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com