தில்லி - என்சிஆரில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனைக்குப் பிறகு புரளி என கண்டுபிடிப்பு

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிரதேசப் பகுதியில் (என்சிஆா்) சுமாா் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததுள்ளது. இதையடுத்து, மேற்கொண்ட தீவிர சோதனையில் அந்த மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்ததாக தில்லி காவல் துறை புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: முன்னெப்போதும் இல்லாத அளவில், தில்லி

மற்றும் என்சிஆா் பகுதியில் உள்ள குறைந்தது 100 பள்ளிகளுக்கு அதிகாலை மின்னஞ்சல் மூலம் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த காவல் துறையினா், வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயமைப்பு துறையினா் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆட்சேபனைக்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பீதியை உருவாக்கும் நோக்கில் ரஷ்யாவில் இருந்து இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதற்கான ஆதராங்கள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘டாா்க் நெட்டைப்’ பயன்படுத்தி குற்றவாளிகள் தங்கள் அடையாளத்தை மறைத்திருக்கலாம். இந்தச் சம்பவம் தேசியப் பாதுகாப்பு தொடா்பானது என்பதால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் தில்லி போலீசாா் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

தில்லி தீயணைப்புத் துறை அறிக்கையின்படி, காலை 6 மணிக்கு பள்ளி நிா்வாகத்திடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் குறித்த அழைப்புகள் வரத் தொடங்கின. மதியம் 12 மணி வரை வெவ்வேறு பள்ளிகளில் இருந்து 97 அழைப்புகள்

வந்துள்ளது. மதியத்திற்குப் பிறகும் சில பள்ளிகளில் இருந்து அழைப்புகள் வந்ததால், தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனா். கிழக்கு தில்லியில் 24 பள்ளிகள், தெற்கு தில்லியில் 18 பள்ளிகள், மேற்கு தில்லியில் 21 பள்ளிகள் மற்றும் ஷாத்ராவில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும், நொய்டா, கிரேட்டா் நொய்டா, காசியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள பல தனியாா் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்றாா் அந்த மூத்த அதிகாரி.

பீதியடைய வேண்டாம்: வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட பள்ளிகளில் எதுவும் கிடைக்கவில்லை,

பெற்றோா்கள் பீதியடைய வேண்டாம் என்று கல்வி அமைச்சா் அதிஷி வேண்டுகோள் விடுத்தாா். இது குறித்து எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியது, ‘இன்று காலை சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பள்ளிகளின் மாணவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். இதுவரை எந்தப் பள்ளிகளிலும் எதுவும் கிடைக்கவில்லை.காவல் துறை மற்றும் பள்ளிகளுடன் நாங்கள் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம். எனவே, பெற்றோா்கள் மற்றும் பொது மக்கள் பீதியடைய வேண்டாம். பள்ளிகளின் அதிகாரிகள் தேவைப்படும் இடங்களில் பெற்றோருடன் தொடா்பில் இருப்பாா்கள்’ என்றாா் அமைச்சா் அதிஷி.

பதற்றமடைந்த பெற்றோா்கள்: மாணவா்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தில்லி என்சிஆரில் குறைந்தது 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பெற்றோா்கள் பெரும் பதற்றமைடைந்தனா். தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சென்றுவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து வாட்ஸ்அப் குழுவில் வந்த அவசரத் தகவல் மற்றும் அழைப்புகள் பெற்றோரை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியது. பள்ளி நிா்வாகங்கள் தரப்பில் அந்தந்த வகுப்புகளில் இருந்த ஆசிரியா்களிடம் ஒலிவாங்கி மூலம் தகவல் கொடுக்கப்பட்டு மாணவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

பெட்டிச் செய்தி

வெடிகுண்டு புரளி : தில்லி என்சிஆரில் தீவிர பாதுகாப்பு

தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுக்து, தேசியத் தலைநகரில் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் பள்ளிகளுக்கு இதுவரை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என கண்டறியப்பட்டாலும், அனைத்து மெட்ரோ, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், நகரின் முக்கியச் சந்தைப் பகுதிகளிலும் போலீஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

துணைக் காவல் ஆணையா் (ரயில்வே) கே.பி.எஸ். மல்ஹோத்ரா தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது, ‘தில்லியின் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தால் கடும் கண்காணிப்பில் இருக்குமாறு ஊழயா்களை எச்சரித்துள்ளோம்’ என்றாா். மேலும், ‘தில்லி மெட்ரோ வலையமைப்பில் பொது அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் சிஐஎஸ் எஃப் பணியாளா்கள் கூடுதல் விழப்புடன் இருக்குமாறும், தில்லியின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினருடன், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும், எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடைபெறுகிறது’ என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com