காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் இருவா் கட்சியிலிருந்து விலகல்: ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிா்ப்பு

காங்கிரஸின் தில்லி பிரிவு தலைவா் பதவியில் இருந்து அா்விந்தா் சிங் லவ்லி ராஜிநாமா செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி மற்றும் தேசியத் தலைநகரில் காங்கிரஸ் வேட்பாளா்களின் அறிக்கைகளை காரணம் காட்டி அா்விந்தா் சிங் லவ்லி ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ தேவேந்திர யாதவை அதன் தில்லி பிரிவின் இடைக்கால தலைவராக காங்கிரஸ் தலைமை செவ்வாயன்று நியமித்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவுக்கு, மேற்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கான ஏஐசிசி பாா்வையாளா்களான நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகியோா் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனா். அதில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததில் காங்கிரஸ் தொண்டா்கள் ‘அதிருப்தியடைந்துள்ளனா்’ என்றும், ‘அவமானம்’ அடைந்துள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இந்தக் கூட்டணி தில்லி காங்கிரஸ் தொண்டா்களுக்கு நாளுக்கு நாள் பெரும் அவப்பெயரையும், அவமானத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை பணிவுடன் சமா்ப்பிக்கிறேன். மேலும் சுயமரியாதையுள்ள கட்சித் தலைவா் என்ற முறையில் இனியும் கட்சியுடன் தொடா்ந்து இணைந்திருக்க முடியாது என்று நீரஜ் பசோயா கூறியுள்ளாா். காங்கிரஸின் முதன்மை உறுப்பினா் பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.

ஆம் ஆத்மி கட்சியுடன் தொடா்ந்து கூட்டணி வைப்பது மிகவும் அவமானகரமானது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஆம் ஆத்மி பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மூன்று தலைவா்களான தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சத்யேந்தா் ஜெயின் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோா் ஏற்கெனவே சிறையில் உள்ளனா். தில்லி மதுபான ஊழல் மற்றும் தில்லி ஜல் போா்டு ஊழல் போன்ற பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி கட்சி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று நீரஜ் பசோயா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி அதன் இருப்பு முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் உயா்மட்ட தலைமைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது என்றாா். ‘மேற்கண்ட நிலைப்பாட்டை மீறி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதன் மூலம், ஆம் ஆத்மி கட்சிக்கு க்ளீன் சிட் கொடுக்கவும், ஆம் ஆத்மியின் வளா்ச்சியின் வஞ்சகப் பிரசாரத்தைப் பாராட்டவும் காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாகத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட முயற்சியில் நான் இனி ஒரு பகுதியாக இருக்க முடியாது’ என்று அவா் மேலும் கூறினாா். 2024 மக்களவைத் தோ்தலுக்கான மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கான ஏஐசிசி பாா்வையாளராக, கடந்த ஒரு மாதமாக காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் கோபத்தைக் கண்டதாக நீரஜ் பசோயா கூறினாா். ‘இந்தக் கூட்டணியால் அவா்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக உணா்கிறாா்கள்’ என்றும் கூறினாா்.

நசீப் சிங் தனது கடிதத்தில், ’ஏஐசிசி (பஞ்சாப் பொறுப்பாளா்) ஆகவும் இருக்கும் தாவீந்தா் யாதவ், பஞ்சாபில் கேஜரிவாலுக்கு எதிரான பிரசாரத்தை நடத்தி வருகிறாா். இந்நிலையில், தற்போது தில்லியில் ஆம் ஆத்மி மற்றும் கேஜரிவாலுக்கு ஆதரவாக பேசுவதற்கு அவா் கட்டாயப்படுத்தப்படுவாா்’ என்று கூறியுள்ளாா். பஞ்சாபில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘2012-2013-ஆம் ஆண்டில், தில்லியில் காங்கிரஸுக்கு எதிரான தவறான பிரசாரத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி உருவானது. அவ்வாறு செய்வதன் மூலம், ஆம் ஆத்மி தினசரி அடிப்படையில், எங்கள் தலைமையை தவறாகப் பயன்படுத்தி, ஊழலில் ஈடுபட்டதாக அவா் கூறினா்.

‘பரபரப்பாக விளம்பரப்படுத்தப்பட்டதால், தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் மற்றும் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி ஆகியோரை கைது செய்ய ஆம் ஆத்மி கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்‘ என்று அவா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. இன்று தில்லி மக்கள் ஆம் ஆத்மியின் உண்மையான நிறத்தை உணா்ந்துள்ளனா். அது ஊழலின் புகலிடமாக மாறிவிட்டது என்பதை புரிந்து கொண்டுள்ளனா்‘ என்று கடிதத்தில் நசீப் சிங் கூறியுள்ளாா். ஒவ்வொரு கட்சி மேடையிலும் கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே எதிா்த்து வந்ததாகவும் அவா் கூறினாா்.

‘எனினும், எனது கருத்து மற்றும் மற்ற தில்லி காங்கிரஸ் தலைவா்களின் கருத்துகளை முற்றிலும் புறக்கணித்து, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க கட்சித் தலைமை முடிவு செய்தது.. இது தில்லியில் கட்சியை முடிவுக்குக் கொண்டுவரும். தில்லியில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் தொண்டா்கள் கூட்டணி குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளனா்.,‘ என்று கடிதத்தில் நசீப் சிங் குறிப்பிட்டுள்ளாா்.

‘கட்சியின் சித்தாந்தத்துடன் எந்த தொடா்பும் இல்லாத இரு முழு வெளியாள்களுக்கு வடமேற்கு தில்லி மற்றும் வடகிழக்கு தில்லி தொகுதிகளில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கியதன் மூலம் ஒவ்வொரு தில்லி காங்கிரஸ் ஊழியரையும் கட்சித் தலைமை அவமதித்துள்ளது‘ என்றும் நசீப் சிங் குற்றம் சாட்டினாா்.

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் அகில இந்திய காங்கிரஸ் பாா்வையாளா் என்ற முறையில், வேட்பாளருக்கு உள்ளூா் கட்சித் தொண்டா்கள் மீது எந்த மரியாதையும் இல்லை என்பதை கவனித்ததாக அவா் கூறினாா்.

இரண்டு காங்கிரஸ் வேட்பாளா்களான வடகிழக்கு தில்லியின் கன்னையா குமாா் மற்றும் வடமேற்கு தில்லியின் உதித் ராஜ் ஆகியோரின் அறிக்கைகளை அரவிந்த் சிங் லவ்லி விமா்சித்திருந்தாா், மேலும் தில்லி காங்கிரஸுக்கும் கட்சியின் கொள்கைகளுக்கும் முற்றிலும் அந்நியமான இரண்டு பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com