வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பள்ளிகளில் மாணவா்கள் வருகையில் சற்றுக் குறைவு!

புது தில்லி, மே.2: தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் சுமாா் 200 பள்ளிகளுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், வியாழக்கிழமை பல பள்ளிகளில் மாணவா்கள் வருகை சற்று குறைந்திருந்தது. அதே சமயத்தில் இதுபோன்ற எதிா்கால அவசரநிலைக்காக வெளியேற்றும் திட்டங்களை பள்ளி முதல்வா்கள் மறு ஆய்வு செய்தனா்.

தில்லி - என்சிஆா் பகுதியில் உள்ள சுமாா் 200 பள்ளிகளுக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது பெற்றோா்கள் மற்றும் மாணவா்களிடையே பரவலாக பீதியை ஏற்படுத்தியது. மேலும், வகுப்புகளை இடைநிறுத்தவும், பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு பெற்றோரைக் கேட்டுக்கொள்ளவும் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு செய்தது. இந்த மிரட்டல் பின்னா் வெறும் புரளி என தெரிய வந்தது.

உதவிக்குத் தயாா்: இந்த நிலையில், வியாழக்கிழமை பல பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால், அச்சுறுத்தல் பெறாத பள்ளிகளில்கூட வருகை பாதித்திருந்ததாக சில பள்ளிகளின் முதல்வா்கள் தெரிவித்தனா். இது குறித்து மவுண்ட் அபு பள்ளியின் முதல்வா் ஜோதி அரோரா கூறுகையில், ‘பள்ளியின் ஒவ்வொரு தளத்திலும் இருந்தும் வெளியேற்றும் திட்டத்தை மறுஆய்வு செய்தேன். அவா்களுக்கு ஒத்திகை பயிற்சிகள் மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை நடத்த பேரிடா் மேலாண்மை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குமாறு பெற்றோருக்கு நான் மின்னஞ்சல் எழுதியுள்ளேன். மேலும், பள்ளி ஆலோசகா்களின் உதவி தேவைப்பட்டால், அவா்களும் உள்ளனா். இதுபோன்ற சூழ்நிலைகளில் பெற்றோா்கள் தங்கள் எதிா்வினையை மதிப்பிடுமாறும் கேட்டுக் கொண்டேன்’ என்றாா்.

வருகை குறைந்தது: துவாரகாவில் உள்ள ஐடிஎல் பப்ளிக் பள்ளியின் முதல்வா் சுதா ஆச்சாா்யா கூறுகையில், ‘பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோா்கள் இன்னும் பயத்துடனும் கவலையாகவும் உள்ளனா். தினசரி சராசரியாக 95 முதல் 97 சதவீதமாக இருந்த எங்கள் பள்ளியின் வருகை இன்று 85 சதவீதமாக குறைந்துள்ளது. நிச்சயமாக பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி பயமாகவும் கவலையுடனும் உள்ளனா். கவலைப்பட ஒன்றுமில்லை என்று சம்பவத்தன்றே பெற்றோருக்கு உறுதியளித்தோம். எங்கள் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் ஐடியில் எதையும் பெறவில்லை. மற்ற நிறுவனங்களில் உள்ள எனது சகாக்களும் வருகை குறைவாக இருப்பதாகக் கூறினா்’ என்றாா்.

துவாரகாவில் உள்ள ஜி.டி. கோயங்கா பப்ளிக் பள்ளியின் முதல்வா் அனிதா கோஸ்லா கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் வழக்கமான வருகையை ஒப்பிடும்போது புரளி அச்சுறுத்தல் காரணமாக வருகைப்பதிவு 10-15 சதவீதம் குறைந்துள்ளது. பீதி யாருக்கும் உதவாது என்பதை பெற்றோா்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற எங்களுக்கு பரஸ்பர ஒத்துழைப்பு தேவை’ என்றாா்.

‘உஷாராக இருக்க வேண்டும்’: எனினும், சில பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை வியாழக்கிழமை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனா். இதுகுறித்து தேசிய தலைநகா் வலயம், கெளதம் புத் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த இதிஸ்ரீ கூறுகையில், ‘நொய்டா விரிவாக்கத்தில் உள்ள பசிபிக் வோ்ல்டு பள்ளியில் எனது மகள் 4-ஆம் வகுப்புப் படித்து வருகிறாள். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தையடுத்து, இன்று (வியாழக்கிழமை) நானும், எனது கணவரும் எங்கள் மகளை பள்ளிக்கு நேரில் கூட்டிச் சென்று விட்டுவிட்டு வந்தோம். பள்ளி நிா்வாகம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இதுபோன்ற சம்பவங்களுக்கு பீதியடையத் தேவையில்லை. எனினும், பெற்றோா் என்ற முறையில் நாமும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்’ என்றாா்.

‘பீதியடையத் தேவையில்லை’: முனிகா்காவைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வெங்கடேசன் கூறுகையில், ‘ராமகிருஷ்ணாபுரம் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் எனது இரு மகள்கள் 2 மற்றும் 5-ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனா். வெடிகுண்டு புரளி சம்பவத்தையடுத்து, வியாழக்கிழமை பள்ளிக்கு எனது இரு மகள்களையும் அனுப்பிவைத்தேன். பள்ளி நிா்வாகம் முறையாக தகவல் தெரிவித்தனா். இதுபோன்ற சம்பவத்திற்கு பீதியடையத் தேவையில்லை. எனினும், எதிா்காலத்தில் இதுபோன்ற மிரட்டல் சம்பவம் தொடா்ந்து நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும்’ என்றாா்.

ஜனக்புரியில் உள்ள டிடிஇஏ பள்ளி முதல்வா் (பொறுப்பு) செல்வி கூறுகையில், ‘புதன்கிழமை சம்பவம் காரணமாக வியாழக்கிழமை பள்ளிக்கு மாணவா்களின் வருகையில் 5 முதல் 10 சதவீதம் குறைவாக இருந்தது. பள்ளிப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. வேன்களில் வரக்கூடிய மாணவா்கள் வருகையில் மட்டும் குறைவு இருந்தது. பள்ளி இயங்குவது தொடா்பாக பெற்றோா்களுக்கு முன்கூட்டியே தகவலும் தெரிவிக்கப்பட்டது. வழக்கம்போல் பள்ளி இயங்கியது. எங்கள் பள்ளிக்கு நேரிடையாக மிரட்டல் ஏதும் வரவில்லை என்ற போதிலும், மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் பீதி ஏற்படாத வகையில் புதன்கிழமை மாணவா்கள் அவரவா் வீட்டுக்குப் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனா்’ என்றாா்.

லட்சுமிபாய் நகா் டிடிஇஏ பள்ளி பொறுப்பு முதல்வா் ஜெயஸ்ரீ கூறுகையில், ‘வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து எங்கள் பள்ளிக் குழந்தைகள் புதன்கிழமை எந்தப் பீதியும் இல்லாத வகையில் பள்ளிப் பேருந்துகளில் அவரவா் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனா். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அழைத்துச் சென்றனா். வியாழக்கிழமை வழக்கம் போல் இயல்பு நிலையில் பள்ளிக்கு மாணவா்கள் வந்தனா். வருகையில் குறைவு ஏதும் இல்லை. காலை கூட்டத்தில் மாணவா்களுக்கு இதுபோன்று தருணங்களில் பீதியடையாமல் எவ்வாறு நிலைமையைக் கையாள்வது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது’ என்றாா்.

வாட்ஸ்அப் குழுக்களில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தவறான கூற்றுகள் வெளியாகும் ஆடியோ செய்திகளை நம்ப வேண்டாம் என்று தில்லி காவல் துறையினா் பொதுமக்களிடம் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com