மக்களவைத் தோ்தலுக்காக கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிசீலனை

இடைக்கால ஜாமீன் விவகாரம் மீதான வாதங்களைக் கேட்க உள்ளதாக அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தில்லியில் மக்களவைத் தோ்தலையொட்டி, கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம் மீதான வாதங்களைக் கேட்க உள்ளதாக அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது அவா் நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கில் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்பது உள்பட 5 கேள்விகளை அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. மேலும், வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்ததது.

அப்போது, அமலாக்கத்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம்

நீதிபதிகள் அமா்வு, ‘கேஜரிவாலின் கைதுக்கு எதிரான மனு மீதான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இதனால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து அமலாக்கத் துறையின் வாதத்தைக் கேட்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்ததது.

அதற்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிா்த்து வாதிடப்போவதாக எஸ்.வி. ராஜு

நீதிபதிகளிடம் கூறினாா்.

அதற்கு நீதிபதிகள், ‘‘நாங்கள் இடைக்கால ஜாமீன் குறித்து விசாரிக்க உள்ளோம் என்றுதான் கூறுகிறோம்.

இடைக்கால ஜாமீன் வழங்குவோம் என்று கூறவில்லை. நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கலாம் அல்லது வழங்காமல் இருக்கலாம்’’ என்று கூறினா்.

இதையடுத்து, மே 7-ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களுக்கு தயாராக வருமாறு

எஸ்.வி. ராஜுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘தில்லி கலால் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை கேஜரிவாலுக்கு மாா்ச் 16-ஆம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. அவா், மாா்ச் 25-ஆம் தேதி அமலாக்கத் துறை முன் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், மாா்ச் 21-ஆம் தேதி அவரைக் கைது செய்ய சூழலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்ததா?

மாா்ச் 16-ஆம் தேதிவரை கேஜரிவால் குற்றம்சாட்டப்படாத நிலையில் அதன் பிறகு என்ன மாற்றம்

ஏற்பட்டது.

அமலாக்கத் துறை தனது பதிலில் பணப் பரிவா்த்தனை இருந்ததாக கூறியுள்ளது. இது சிசோடியாவின்

வழக்கை போன்றுதான் உள்ளது. இதனால், எதுவும் மாறவில்லை. பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மி கட்சி மீது வழக்குப் பதிவு செய்ய முடியுமா?. அதன் பிறகு, கேஜரிவால் விசாரணைக்கு உள்படுத்தப்படுவாரா?

பிஎம்எல்ஏ சட்டப் பிரிவு 70-ஐ (நிறுவனங்களின் குற்றங்கள்) மேற்கோள்காட்டி ஆம் ஆத்மி கட்சி தவறுகளைச் செய்ததாக அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டாலும்கூட, கேஜரிவாலை கைது செய்திருந்திருக்க முடியாது என்று வாதிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com