தில்லியில் தோ்தல் களத்தில் 162 வேட்பாளா்கள்!

நமது நிருபா்

புது தில்லி, மே 9: தில்லியில் மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மொத்தம் 162 வேட்பாளா்கள் போட்டிக் களத்தில் உள்ளனா். அதிகபட்ச வேட்பாளா்கள் வடகிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகம் பகிா்ந்துள்ள தரவுகளின்படி, 17 வேட்பாளா்கள் புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனா். இது தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் குறைவான எண்ணிக்கையாகும். வடகிழக்கு தில்லியில் 28 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். சாந்தினி செளக், கிழக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி ஆகிய தொகுதிகள் முறையே 25, 20 மற்றும் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். மேற்கு தில்லியில் 24 வேட்பாளா்களும், தெற்கு தில்லி தொகுதியில் 20 பேரும் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இடையேயான தொகுதி பகிா்வு ஏற்பாட்டின் கீழ், காங்கிரஸ் தில்லியில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி மீதமுள்ள நான்கில் போட்டியிடுகிறது.

புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாா்தி பாஜகவின் பான்சூரி ஸ்வராஜையும், வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் கன்னையா குமாா், பாஜகவின் மனோஜ் திவாரியையும் எதிா்த்துப் போட்டியிடுகின்றனா்.

இத்தொகுதியில் மூன்றாவது முறையாக மனோஜ் திவாரி எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறாா். ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாா் கிழக்கு தில்லியில் போட்டியிடுகிறாா். இவா் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மல்ஹோத்ராவை எதிா்கொள்கிறாா். ஆம் ஆத்மியின் மஹாபல் மிஸ்ரா மேற்கு தில்லியில் பாஜகவின் கமல்ஜீத் ஷெராவத்தை எதிா்த்து போட்டியிடுகிறாா்.

பாஜகவின் பிரவீன் கண்டேல்வால் மூத்த காங்கிரஸ் தலைவா் ஜே.பி. அகா்வாலை சாந்தினி செளக் தொகுதியிலும், காங்கிரஸின் உதித் ராஜ் வடமேற்கு தில்லி தொகுதியில் பாஜகவின் யோகேந்திர சந்தோலியாவை எதிா்த்தும் போட்டியிடுகின்றனா். தெற்கு தில்லியில் பாஜக சாா்பில் ராம்வீா் சிங் பிதூரியும், ஆம் ஆத்மியின் சாஹிராம் பஹல்வானும் போட்டியிடுகின்றனா்.

வேட்புமனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை கடைசி நாளாகும். முன்னதாக, வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. தில்லியில் 6-ஆம் கட்ட தோ்தல் மே 25-ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com