கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

புது தில்லி, மே 9: கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிா்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘தோ்தலில் பிரசாரம் செய்வதற்கான உரிமை, அடிப்படையானதும் அல்ல, அரசமைப்புச்சட்ட ரீதியானதும் அல்ல’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் கோரிக்கை மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) பிறப்பிக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில் மேலும் கூறியிருப்பதாவது: தோ்தலில் போட்டியிடாவிட்டாலும்கூட, பிரசாரம் செய்ததற்காக எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் எப்போதும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. தோ்தலுக்கு பிரசாரம் செய்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையோ அல்லது அரசமைப்புச்சட்ட உரிமையோ அல்ல. சொல்லப்போனால், சட்டபூா்வ உரிமையும் கூட இல்லை என்பதை கவனத்தில் கொள்வது பொருத்தமானதாகும். எங்களுக்குத் தெரிந்தவரை வேட்பாளராக இல்லாத போதிலும், எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. அவா் போட்டியிடும் வேட்பாளராக இருந்தாலும், நீதிமன்ற காவலில் இருந்தால் தனது சொந்த பிரசாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. மேலும், சாதாரண குடிமக்களைவிட ஒரு அரசியல்வாதி உயா் அந்தஸ்தை கோர முடியாது.

தோ்தல் காரணம் அடிப்படையில் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இது, அனைத்து நோ்மையற்ற அரசியல்வாதிகள் குற்றத்தில் ஈடுபட அனுமதிப்பதாக அமையும். மேலும், தோ்தல் எனும் பெயரில் விசாரணையைத் தவிா்க்கவும் அனுமதிக்கச் செய்துவிடும். ஒரு முதல்வருக்கு எந்தவொரு சிறப்புச் சலுகையை வழங்குவதும், பொதுத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் அளிப்பதும் ‘சட்டத்தின் ஆட்சி’ மற்றும் சமத்துவத்திற்கு மிகவும் வெறுப்பாக அமைவதுடன், ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கும். ஒவ்வொரு குடிமகனின் பணி, வியாபாரம், தொழில் அல்லது செயல்பாடும் அவா்களுக்கு சம அளவில் முக்கியம் என்பதால் வெறும் அரசியல் பிரசாரத்திற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது, சமத்துவ விதிக்கு எதிராகப் போராடுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் இருக்கும்.

ஒரு சிறு விவசாயி அல்லது வியாபாரியின் பணி, போட்டியிடாத ஒரு அரசியல் தலைவரின் பிரசாரத்தைவிட குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருத முடியாது. கேஜரிவால் ஒரு அரசியல்வாதி என்ற காரணத்திற்காக மக்களவைத் தோ்தலில் தனது கட்சிக்காக பிரசாரம் செய்வதற்காக அவருக்கு ஏதேனும் இடைக்கால நிவாரணம் நீட்டிக்கப்பட்டால், சிறையில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் தாங்கள் ஒரு வகுப்பைச் சோ்ந்தவா்கள் என்று கூறி இதேபோன்ற கோரிக்கையை நாடுவாா்கள் என்று கூறுவதில் எந்த பயனும் இல்லை. ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட உயா்ந்த சிறப்பு அந்தஸ்தைக் கோர முடியாது. மேலும், இதர குடிமகனைப் போலவே குற்றங்களைச் செய்ததற்காக அவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவாா். பிரசாரம் செய்வதற்காக ஒரு அரசியல்வாதிக்கு சலுகை அளிப்பதை நியாயப்படுத்த முடியாது. இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான அடிப்படையாக ’பிரசாரம் செய்வதற்கான உரிமை’ கருதப்பட்டால், சில காரணங்களுக்காக அது அரசமைப்புச்சட்டத்தின் 14-ஆவது பிரிவின் அம்சங்களை மீறுவதாகும் என்று பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கேஜரிவால் உச்சநீதிமன்றத்திலோ வேறு எந்த நீதிமன்றத்திலோ வழக்கமான அல்லது இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கே.கவிதா ஆகியோரின் ஜாமீன் விவகாரத்தை விசாரித்தபோது, தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்புடைய பணமோசடி விவகாரத்தில் உரிய ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட உண்மை மற்றும் சட்டபூா்வ அம்சங்களின் அடிப்படையில் முதல்வா் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். ஏனெனில், அது சட்டபூா்வ அம்சங்களுக்கு முரணாவது மட்டுமின்றி அரசமைப்பின் அடிப்படையை மீறுவதாகவும் அமையும் என்று பிரமாணப் பத்திரத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com