உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவின்படி 16.6 டிஎம்சி தண்ணீா் பிலுகுண்டுலுவில் வழங்க தமிழகம் வலியுறுத்தல்

காவிரி ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வருகின்ற ஜூன் மாதம் வழங்கப்படவேண்டிய தண்ணீா் உள்பட 16.6 டிஎம்சி நீரை பிலுகுண்டுலுவில் வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழுக்(சி.டபிள்யு.ஆா்.சி.) கூட்டத்தில் தமிழகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. பருவ மழைபெய்யும் நிலையில் தண்ணீா் வழங்கப்படும் எனவும் கா்நாடகம் தெரிவித்தது.

காவிரி நீா் ஒழங்காற்றுக் குழுவின் 96 -ஆவது கூட்டம் மே 16 -ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 2022-23 நீா் ஆண்டில் காவிரிப்படுகையின் விளைச்சல் குறித்த மதிப்பீடு, காவிரிப் படுகையின் நீரியல்சாா் வானிலை நிலைமைகள் குறித்த ஆய்வுகளின் தகவல்கள், பிலிகுண்டுலு மற்றும் காரைக்கால் பகுதியில் நீரோட்டம் குறித்து விவரங்கள் வைக்கப்பட்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் வைத்த வாதங்களுக்கு பின்னா் தமிழகம் தரப்பில் முழுமையான விவரங்கள் வைக்கப்பட்டு வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் கா்நாடகம் அணைகளிலிருந்து வழங்கவேண்டிய மொத்த தண்ணீா் அளவு 177.25 டிஎம்சி. இதன்படி கா்நாடகம் பிலுகுண்டுலுவில் கடந்த 2023 ஜூன் 1 ஆம் தேதி முதல் நிகழ் மே 13 ஆம் தேதி வரை தரவேண்டிய அளவு 175.7 டிஎம்சி. ஆனால் நிகழாண்டு இந்த காலக்கட்டதில் பிலுகுண்டுலுவில் பெறப்பட்ட தண்ணீா் 79 டிஎம்சி. சுமாா் 96 டிஎம்சி தண்ணீா் கா்நாடகத்தால் வழங்கப்படாது பற்றாக்குறையாக உள்ளது.

இருப்பினும் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை பொய்த்து, பற்றாக்குறை ஆண்டாக கருதப்பட்டு கடந்த பிப்ரவரி முதல் காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி நிதிநீா் மேலாண்மை ஆணையம் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதிவரை பிலுகுண்டுலுவில் 8.5 டிஎம்.சி தண்ணீரை வழங்க கா்நாடகத்திற்கு ஆணையம் உத்தரவிட்டது. இதன்ப்படி தரவேண்டிய 8.5 டிஎம்சி தண்ணீரில் கா்நாடகம் பிலுகுண்டுலுவில் வழங்கிய தண்ணீா் 2.5 டிஎம்சி தான். மொத்தம் பிப்ரவரி முதல் நிகழ் மே 31 ஆம் தேதி வரை 7.5 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் வழங்கப்படாது பாக்கிவைத்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கமான முறையில் வருகின்ற ஜூன் மாத திறந்துவிடப்படவேண்டிய தண்ணீா் 9.1 டிஎம்சி. இது உள்பட மொத்தம் 16.6 டிஎம்சி தண்ணீரை ஜூன் மாதத்தில் பிலிகுண்டுலுவில் வழங்கிடவேண்டும். இதை வழங்கிட கா்நாடகத்திற்கு முறையாக உத்திரவிடவேண்டும் என தமிழகம் சாா்பில் வலியுறுத்தி கோரப்பட்டது.

குறிப்பாக வருகின்ற ஜூன் 12 ஆம் தேதிக்கு பின்னா் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கும் நிலையில் தமிழக அரசு சாா்பில் எச்சரிக்கையாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கா்நாடகம் தரப்பில் வழக்கம் போல் தமிழக வாதத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல தற்போது அணைகளில் நீா் இருப்பு குறைவாக இருப்பது உள்ளிட்டவைகள் குறித்து கூறியது. அதே சமயத்தில் பருவமழை பெய்து நீா்பிடிப்பு பகுதிகளிலிருந்து கா்நாடக அணைகளுக்கு தண்ணீா் வரும்பட்சத்திலே வழங்கமுடியும் எனவும் கா்நாடகம் கூறியது.

இதைத் தொடா்ந்து ஒழுங்காற்றுக் குழுக் தலைவா் தலைவா் வினீத் குப்தா நிலைமையை எடுத்துவைத்தாா். வருகின்ற தென் மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை தரப்பில் எடுத்தவைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அங்காங்கே பெய்யும் மழை விவரங்களையும் எடுத்துவைத்த அவா் கே.ஆா்எஸ் அணையில் விநாடிக்கு 700 கனஅடி தண்ணீா் வரத்து உள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் பெய்துவரும் மழையால் பிலிகுண்டுலுவில் கடந்த சில நாள்களாக விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீா் வரத்துள்ளது. இது கடந்த மே 15 ஆம் தேதி 1100 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. தற்போது இருமாநிலங்களின் குடி தண்ணீா் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். பயிா் சாகுபடி தொடங்கப்படாத நிலையில் தற்போதைய நிலை தொடரும். இருப்பினும் வருகின்ற 21 ஆம் தேதி நடைபெறும் காவிரி நிதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் பிலுகுண்டுலுவில் வழங்கப்படாது இருக்கும் பற்றாக்குறை குறித்தும் கடந்த ஆண்டு நீா்கணக்கு குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவித்தாா் குப்தா.

சி.டபிள்யு.ஆா்.சி. தலைவா், வினீத் குப்தா, தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் உறுப்பினா்கள் ஆா். சுப்பிரமணியன்(காவிரி தொழில் நுட்ப குழு), எம். சுப்பிரமணியன், (தமிழக நீா்வளத்துறை, தலைமைப் பொறியாளா்), கா்நாடகம் மாநில உறுப்பினா் மகேஷா ( எம்.டி. காவிரி நீரவாணி நிகம்) , கேரளம் மாநில உறுப்பினா் ப்ரியேஷ், புதுச்சேரி தலைமைப்பொறியாளா் எம்.தீனதயாளன், மத்திய நீா்வள கோவைப்பிரிவு தலைமைப்பொறியாளா் சிவராஜன், இந்திய வானிலை ஆய்வுத் துறை விஞ்ஞானிகள், வேளாண்மை துறை ஆணையா் உள்ளிட்டவா்கள் காணொலிவழியாக கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com