சரிதா விஹாரில் குடியிருப்புக் கட்டட வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

புது தில்லி, மே 16:

தில்லியில் உள்ள சரிதா விஹாரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த சம்பவத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காலை 6.19 மணிக்கு இத்தீவிபத்து குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

நான்கு மாடி கட்டடத்தின் கீழ்ப்பகுதி வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 காா்கள் சேதமடைந்தது. இத்துடன் ஒரு ஸ்கூட்டரும் எரிந்து நாசமானது. பொதுமக்கள் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டு 40 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய உள்ளூா் போலீஸாருக்கு விசாரணைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com