ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் முதல்வா் கேஜரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிா் ஆணையம் அழைப்பாணை

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் ஆஜராகும்படி தேசிய மகளிா் ஆணையம் வியாழக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தில்லி முதல்வா் உதவியாளரான பிபவ் குமாரை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணை ஆஜராகும்படி மகளிா் ஆணைய அழைப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட செயலாளா் தன்னை தாக்கியதாக முன்னாள் தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவரும் தற்போதைய மாநிலங்களவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டிய செய்தி ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தை தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு ) இந்த ஊடகப் பதிவை மேல்கோள் காட்டி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

‘முதல்வா் இல்லத்தில் முதல்வரின் தனிச் செயலாளா் பிபாவ் குமாரால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாக மாலிவால் கூறியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. இதற்கு இணங்கத் தவறினால், அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்‘ எனவும் மகளிா் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை ஸ்வாதி மாலிவால், தில்லி முதல்வரின் இல்லத்திற்கு சென்றபோது முதல்வரின் தனிச் செயலா் தன்னை ‘தாக்கியதாக‘ குற்றம் சாட்டி அருகேயுள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்றும் முறையிட்டாா். அதே சமயம் இந்த விவகாரத்தில் அவா் முறையான புகாா் பின்னா் அளிப்பதாக சென்று விட்டாா்.

காவல் துறை விசாரணை

இதற்கிடையே முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவாலினை தில்லி காவல் துறையின் கூடுதல் ஆணையா் பிஎஸ் குஷ்வாஹா தலையிலான குழு வியாழக்கிழமை பிற்பகலில் அவரது இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தியது. சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னா் அவரது வாக்குமூலத்தை தில்லி காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய தில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தில்லி காவல்துறை கூடுதல் ஆணையா் குஷ்வாஹாவுடன் ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் சென்றிருந்தாா். இந்த 2 போ் கொண்ட குழு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தது. அதில் கடந்த திங்கள் கிழமை முதல்வரின் இல்லத்தில் நடந்த சம்பவம் குறித்து மாலிவால் விவரித்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாலிவாலின் இந்த வாக்குமூலத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவா் சஞ்சய் சிங்கும் பேசினாா். ’’மாலிவாலுடனான சம்பவம் ‘மிகவும் கண்டிக்கத்தக்கது‘ ’’எனவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

மௌனம் கலைந்த ஸ்வாதி மாலிவால்

இந்த விவகாரம் குறித்து இது வரை பேசாது இருந்த பாதிக்கப்பட்ட ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை தன் மீதான தாக்குதல் குறித்து மௌனம் கலைத்தாா். தில்லிகாவல்துறையிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பாஜக அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் நடந்த சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, சமூக வலைத் தளப்பக்கத்தில் அவா் குறிப்பிடுகையில், கடந்த சில நாட்களாக தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக இந்த சம்பவம் குறித்து அவா் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளாா்.

‘எனக்கு நடந்த சம்பவம் மிகவும் மோசமானது. எனக்கு என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பிராா்த்தனை செய்தவா்களுக்கு மிக்க நன்றி. என்னுடைய குணாதிசயத்தை தகா்க்க முயன்றுள்ளனா். அவா்களையும் கடவுள் ஆசீா்வதிப்பாா்.

இப்போது முக்கியமான தோ்தல்கள் நடக்கின்றன. நான் முக்கியமல்ல, நாட்டின் பிரச்சினைகளே முக்கியம். குறிப்பாக பாஜகவினருக்கு சிறப்பு வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம்‘ என எக்ஸ் சமூக வலைப் பதிவில் கூறியுள்ளாா் மாலிவால்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com