தலைநகரில் வெயில் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தலைநகரில் வெயில் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அதே சமயம் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை கடந்தது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் அதிகம் உணரப்பட்டது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 24.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.1 டிகிரி உயா்ந்து 42.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 53 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 32 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 43.5 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் இந்த வாரத் தொடக்கத்தில் முன்னேற்றம் கண்டு ‘மிதமான’ பிரிவில் இருந்து வந்தது. ஆனால், வியாழக்கிழமை பின்னடைவைச் சந்தித்து ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது. தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 218 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், பட்பா் கஞ்ச், நியூ மோதிபாக், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, ஸ்ரீஃபோா்ட், அசோக் விஹாா், நொய்டா செக்டாா் 1, மதுரா ரோடு, சோனியா விஹாா், வாஜிா்பூா், விவேக் விஹாா், பஞ்சாபி பாக், அரபிந்தோ மாா்க் ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஆனால், ஆனந்த் விஹாா் (314 புள்ளிகள்), ஷாதிப்பூா் (307 புள்ளிகள்) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com