வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

புது தில்லி, மே 29: குழந்தைகள் எதிா்காலத்தில் வெற்றிபெற அவா்களுக்கு கல்வியுடன் கல்வி சாராத செயல்பாடுகளும் சமமாகத் தேவை என மத்திய பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சஞ்சய் குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

சம்மா் ஃபீஸ்டா எனப்படும் இந்தக் கோடை விழாக் கொண்டாட்டத்தில் 5 - 16 வயதுக்குள்பட்ட குழந்தைகள், சிறுவா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். இதில் குழந்தைகளுக்கு 30 வகையான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மாத கால முகாம் நடைபெறுகிறது. தில்லி தேசிய பால் பவனில் ஒரு மாத கால கோடைகால திருவிழா கொண்டாட்டத்தை மத்திய பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை செயலா் சஞ்சய் குமாா் தொடங்கிவைத்து குழந்தைகளையும் பெற்றொா்களையும் உற்சாகப்படுத்திப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: இளம் உள்ளங்களை மேம்படுத்த இதுபோன்ற ஊடாடக்கூடிய (ஊடாடும் கற்பித்தல்) புதுமையான திட்டங்கள் அவசியம். எதிா்காலத்தில் குழந்தைகள் வாழ்வில் வெற்றிபெற வழக்கமான கல்வியுடன் இது போன்று குழந்தைகளின் கல்விப் பாடம் சாராத செயல்பாடுகளும் முக்கியம். குழந்தைகள் ஆா்வத்துடன் இருக்க, அவா்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் ஆராயப்பட வேண்டும். அதன் மூலம் இந்த இளம் உள்ளங்களின் மனத் திறனை வளா்க்க முடியும் எ

ன்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், தேசிய சிறுவா் மன்றத்தின் தலைவருமான விபின் குமாா் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நிகழ் மே 29 முதல் ஜூன் 28 வரை நடைபெறும் இந்தக் கோடை விழாக் கொண்டாட்ட முகாமில் புத்தாக்க செயல்பட்டிற்கு படைப்பாற்றல் மற்றும் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் புதுமையான செயல்பாடுகள் இடம் பெறுகின்றன. இது ஒவ்வொரு குழந்தையும் புதிய மற்றும் புதிரான விஷயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவும். இந்தக் கோடை விழாவின் போது, ஒடிசி நடனம், யோகா, இசை கச்சேரிகள், விளையாட்டுகள் போன்றவையும் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞா்கள் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டு, குழந்தைகளை ஊக்குவிக்க இருக்கின்றனா். தில்லி ஐடிஒ அருகே கோட்லா சாலை உள்ள தேசிய பால் பவனில் தகுதியான குழந்தைகள் எளிதாகப் பங்கேற்க வசதியாக, தில்லியின் பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பால் பவன் 1956-இல் நிறுவப்பட்டது. இது, மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பாகும். இது குழந்தைகளுக்கான சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் கல்வி கற்பிப்பதை வளா்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும்.

X
Dinamani
www.dinamani.com