வாகன நிறுத்துமிடங்களில் தீயணைப்பு கருவிகளை நிறுவுவதை எம்சிடி உறுதி செய்ய வேண்டும்: தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் வாகன பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் கடுமையான வெப்பத்தை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் அடிப்படை தீயணைப்பு கருவிகளை நிறுவுவதை தில்லி மாநகராட்சி (எம்சிடி) உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு தில்லியில் உள்ள ஐபி எக்ஸ்டென்ஷனில் உள்ள தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் வாகன நிறுத்துமிடத்தில் 16 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் புதன்கிழமை கூறியதாவது: பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்தியிருந்தாலும், தீ விபத்து ஏற்பட்டால் அதைச் சமாளிக்க அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இது தில்லி மாநகராட்சி மற்றும் அதன் ஒப்பந்தக்காரா்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. எரிந்த வாகனங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதே நேரத்தில், வாகன பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் கடுமையான வெப்பத்தை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரா்களுக்கும், அடிப்படை தீயணைப்பு கருவிகளை தாமதமின்றி நிறுவ உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இன்றைய தீ விபத்து விவகாரத்தில் தீயணைப்பு படையினா் தாமதமாக வந்திருந்தது பெரும் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. தீயணைப்புத் துறையின் செயல்பாடு குறித்து முழுமையான விசாரணை அவசியமாகும் என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.

X
Dinamani
www.dinamani.com