தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலையில் கடும் வெயில் நிலவியது.

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலையில் கடும் வெயில் நிலவியது. அதே சமயம், மாலையில் நகரம் முழுவதிலும் பரவலாக லேசான மழை பெய்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முக்கிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இந்நிலையில், தில்லியில் புதன்கிழமையும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை தலைநகரில் இதுவரை இல்லாத அளவாக 52.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இந்நிலையில், மாலையில் பரவலாக லேசான மழை பெய்தது. இது வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ’மோசம்’ பிரிவில் நீடித்தது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், ஆனந்த் விஹாா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (மே 30) அன்று புழுதிக் காற்றும், இடி மின்னலும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com