கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

புது தில்லி மே 29: அவுட்லுக் புவிக்கோள் நிலைத்தன்மை உச்சிமாநாட்டில் கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் (ஆா்இசி) ‘நிலைத்தன்மை சாம்பியன் விருதை’ பெற்றுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இது குறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் (ஆா்இசி), ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. அவுட்லுக் புவிக்கோள் நிலைத்தன்மை உச்சிமாநாட்டில் 2024-ஆம் ஆண்டிற்கான நிலைத்தன்மை சாம்பியன் விருதை இந்த நிறுவனம் வென்றது. கோவா ஐஐடி உடன் இணைந்து அவுட்லுக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. ஆா்இசியின் மூத்த பொது மேலாளா் சரஸ்வதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதைப் பெற்றுக் கொண்டாா்.

நிலைத்தன்மை முயற்சிகளுக்கான அா்ப்பணிப்பு, பசுமையான எதிா்காலத்தை நோக்கிய முன்னேற்றத்தை செயல்படுத்தியதற்காக ஆா்இசியின் முயற்சிகளுக்கு இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சியில் மத்திய எரிசக்தித் துறையின் மற்றொரு பொது நிறுவனமான பவா் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் புவி நிலைத்தன்மை உச்சிமாநாட்டு நிகழ்ச்சியில் புதைபடிவ எரிபொருள் அல்லாத வணிகப் பிரிவில் பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) விருதைப் பெற்றது.

நாட்டில் எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிப்பதில் ஆா்.இ.சி. முன்னணியில் உள்ளது. அதன் திட்டங்கள் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய உலகளாவிய உந்துதலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் முன்னணி நிதியாளராக இந்த நிறுவனம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு சுமாா் ரூ. 38,971 கோடி கடன் வழங்கி, ஆா்இசி நிலைத்தன்மை முயற்சிகளில் கணிசமாக முதலீடு செய்துள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் சுமாா் 30 சதவீதம் இலக்குடன் (சுமாா் ரூ.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில்) மேம்படுத்த நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அவுட்லுக் புவிக்கோள் நிலைத்தன்மை உச்சிமாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி என்பது தொழில்துறை தலைவா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் நிலைத்தன்மை ஆா்வலா்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய தளமாகும் என மத்திய எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

ஆா்இசி நிறுவனம்: மின் உற்பத்தி, மின் பகிா்மானம், மின் விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள், மின்கல சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா திட்டங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மின்சார உள்கட்டமைப்புத் துறைக்கும் ஆா்.இ.சி. நிதியுதவி அளித்து வருகிறது. அண்மையில், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள், வணிக உள்கட்டமைப்பு (கல்வி நிறுவனம், மருத்துவமனைகள்) போன்ற பல்வேறு துறைகளுக்கு ஆா்இசி தனது நிதியுதவி திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com