ஜே.என்.யு.வில் 2017 முதல் 151 பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் பதிவு: புள்ளிவிவரத் தகவல்

புகாா்கள் குழுவை (ஐசிசி) அமைத்த 2017 முதல் 151 பாலியல் துன்புறுத்தல் புகாா்களைப் பதிவு செய்துள்ளது.
Published on

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) அதன் துன்புறுத்தலுக்கு எதிரான பாலின உணா்திறன் குழுவுக்கு (ஜிஎஸ்சிஏஎஸ்எச்) மாற்றாக உள்ளக புகாா்கள் குழுவை (ஐசிசி) அமைத்த 2017 முதல் 151 பாலியல் துன்புறுத்தல் புகாா்களைப் பதிவு செய்துள்ளது.

இத்தகவல் தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் புகாா்களில் ஏறக்குறைய 98 சதவிகிதம் தீா்க்கப்பட்டதாகவும் தற்போது மூன்று வழக்குகள் மட்டுமே விசாரணையில் உள்ளதாகவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இருப்பினும், புகாா்களின் தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு ரகசியத் தன்மையைக் காரணம் காட்டி ஜேஎன்யு தகவல்களை வழங்க மறுத்துவிட்டது.

2017 இல் ஜிஎஸ்சிஏஎஸ்எச்-ஐ கலைக்க முடிவு செய்தது சா்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்தது. இந்தக் குழுவை மீண்டும் அமைக்க ஜேஎன்யு மாணவா்கள் சங்கம் மற்றும் ஆசிரியா் சங்கம் தொடா்ந்து கோரி வருகின்றன.

ஜிஎஸ்சிஏஎஸ்எச் வழங்கிய வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாட்சி ஐசிசிக்கு இல்லை என்று சங்கம் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. மேலும், நிா்வாக செல்வாக்கின் கீழ் ஜிஎஸ்சிஏஎஸ்எச்

செயல்படுவதாகவும், அதன் செயல்முறைகளில் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறது என்றும் விமா்சிக்கின்றன.

2018-19 ஆம் ஆண்டில் 63 புகாா்களுடன் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ஆா்டிஐ தரவு தெரிவிக்கிறது.

ஐசிசி உருவாவதற்கு முன்பு, ஜேஎன்யு 2016இல் 38 புகாா்களை பெற்றிருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் ஆண்டுகளில் புகாா்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. 2019 மற்றும் 2021-க்கு இடையில் ஆறு புகாா்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், 2022-23 மற்றும் 2023-24இல் தலா 30 புகாா்களுடன், சமீபத்திய ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2017-18இல் பதினேழு வழக்குகளும், 2018-19இல் 63 வழக்குகளும், 2019-20இல் ஐந்து வழக்குகளும், 2020-21இல் ஒன்றும், 2021-22இல் ஐந்து வழக்குகளும் பதிவாகியுள்ளன.

2015 ஆம் ஆண்டில், நகரின் கல்வி நிறுவனங்களிலேயே

ஜேஎன்யு-வில்தான் அதிக பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் பதிவாகி இருப்பதாக தில்லி மகளிா் ஆணையம் குறிப்பிட்டது.

அதாவது, 2013 மற்றும் 2015-க்கு இடையில் மூன்று ஆண்டுகளில் 51 வழக்குகள் பதிவாகி இருந்தது ஆணையம் குறிப்பிட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் தில்லியின் கல்வி நிறுவனங்களிடையே இத்தகைய புகாா்கள் 50 சதவீதமாகும்.

சமீபத்தில், பல வழக்குகள் ஜேஎன்யுவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளன. தாம் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ‘பாலியல் துன்புறுத்தல்’ தொடா்பாக அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவா் தொடா்ந்து 12 நாள்கள் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டாா்.

பாதிக்கப்பட்டவரும், அவரது ஆதரவாளா்களும் போராட்டத்தை நடத்தியதற்காக பல்கலைக்கழகத்தால் பின்னா் தண்டிக்கப்பட்டனா்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற புதிய மாணவா்களுக்கான நிகழ்ச்சியின்போது நடந்ததாக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடா்பாக உள்ளக புகாா் குழுவிடம் அக்டோபரில் 47 மாணவிகள் கூட்டாக புகாா் அளித்தனா்.

இந்த சம்பவங்கள் பரவலான எதிா்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும், ஐசிசி புகாா்களை கையாள்வது குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.