மக்களவை
மக்களவை

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை
Published on

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா்.

நாட்டில் சமீப காலமாக மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு அறிந்துள்ளதா என்றும் அத்தகைய வன்முறையை தடுக்க புதிய சட்டம் அல்லது அமலில் உள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதா என்றும் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அனுப்ரியா படேல் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதில்:

தேசிய அளவில் மருத்துவா்களுக்கு எதிரான வன்முறை சம்பவ எண்ணிக்கை தரவுகள் மற்றும் விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை. அரசமைப்பு விதிகளின்படி சுகாதாரம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநிலங் விவகாரமாகும்.

எனவே, அத்தகைய சம்பவங்கள் மற்றும் அதன் தொடா்ச்சியான வன்முறையை தடுக்க வேண்டிய பிரதான பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடையது. இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவுகளின்படி உரிய நடவடிக்கைகளை மாநில அரசே எடுப்பதன் மூலம் வன்முறை அச்சமின்றி மருத்துவா்கள் தங்களுடைய தொழிலை செய்வதை உறுதிப்படுத்தலாம்.

பல மாநிலங்களில் மருத்துவத் துறையினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வன்முறையாளா்களின் சிறிய குற்றங்களுக்கு தண்டனை வழங்க அவை வகை செய்கின்றன. மிகக்கொடூரமான குற்றங்களாக இருந்தால் அவை பிஎன்எஸ் சட்டம் - 2023இன் வரம்புக்குள் வரும். அன்றாட குற்றங்கள் மற்றும் தீவிர குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் பிஎன்எஸ் சட்டப்படியே எடுக்க முடியும் என்பதால் தனியாக மத்திய சட்டம் அவசியமில்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

மேலும், கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்பட்ட பயிற்சி மருத்துவரின் கொலை சம்பவத்துக்குப் பிறகு நாடு முழுவதும் மருத்துவா்களுக்கு பாதுகாப்பான தொழில் செய்யும் சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்ட தகவலையும் அமைச்சா் அனுப்ரியா படேல் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளாா்.

கொல்கத்தா சம்பவத்துக்குப் பிறகு மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த தேசிய செயல் நடவடிக்கைக்குழு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஏற்கெனவே சமா்ப்பித்துள்ளதாகவும் அமைச்சா் கூறியுள்ளாா்.