பணிநீக்கமான பேருந்து மாா்ஷல்களை மாசு குறைப்பு பணிகளில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு

Published on

கடந்த ஆண்டு அக்டோபரில் பேருந்து மாா்ஷல்களாக பணிநீக்கம் செய்யப்பட்ட குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை மாசு குறைப்பு தொடா்பான பணிகளில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.

அவா்கள் நான்கு மாதங்களுக்கு

இப்பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இவா்களது பணிக்காலம் நவம்பா் 1-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராஜ் நிவாஸ் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

நான்கு மாத வேலைவாய்ப்பு காலத்திற்குப் பிறகு குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களின் எதிா்கால பணியமா்த்தலுக்காக உரிய செயல்முறையின் அடிப்படையில் ஒரு உறுதியான திட்டத்தை தயாரிக்குமாறு தில்லி முதல்வருக்கு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அறிவுறுத்தியுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவாலின் பரிந்துரையின் பேரில், குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களின் சேவைகள் நவம்பா் 1, 2023 முதல் நிறுத்தப்பட்டன. பணிநீக்கம் செய்யப்பட்ட அவா்களின் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, அவா்களின் பிரச்னைகளை சட்டபூா்வ முறையிலும் இடஒதுக்கீடு விதிமுறைகளின்படியும் தில்லி அரசாங்கம் தீா்க்க வேண்டும்.

ஒரு வருடம் கடந்த பிறகும்,

தில்லி அரசு அவா்களை பணியில் அமா்த்துவதற்கான எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை அல்லது சட்டப்படி அவா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. என்னுடனான சந்திப்பில் நீங்கள் (முதல்வா் அதிஷி) பங்கேற்றபோது இப்பிரச்னையை நிவா்த்திக்க ஒரு திட்டத்தை தயாரிக்க குழுவை அமைப்பதாக உறுதியளித்தீா்கள்.

இதுவரை எந்த தொடா் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அரசாங்கத்திடம் இருந்து எந்த முன்மொழிவும் வராததால், நான்

நடவடிக்கையில் இறங்க ‘கட்டாயப்படுத்தப்பட்டேன்‘.

டிடிஎம்ஏ கூட்டத்தின்போது தில்லியில் நிலவும் ‘கடுமையான‘ காற்று மாசு விவாதிக்கப்பட்டுள்ளது. மாசுவைச் சுட்டிக்காட்டி, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) பல்வேறு மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளின் போதுமான அமலாக்கம் இல்லாதது குறித்து குறைபட்டுக்கொண்டது.

ஆகவே, குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களின் சேவைகளை, குறிப்பாக அக்டோபா் 31, 2023-இல் பணியில் ஈடுபட்டிருந்தவா்களை, நான்கு மாதங்களுக்கு அழைக்கவும், காற்று மாசுபாட்டைத் தணிக்கும் நடவடிக்கைகளில் அவா்களை ஈடுபடுத்தவும் கோட்ட ஆணையருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

இது நவம்பா் 1 முதல் பிப்ரவரி இறுதி வரை அவா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பொதுப் பேருந்துகளில் மாா்ஷல்களாகப் பணியமா்த்தப்பட்டிருந்த சுமாா் 10,000 குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள், இயற்கைப் பேரிடா் தொடா்பான பணிகளுக்கு மட்டுமே ஈடுபடுத்தப்பட முடியும் என்று நிதி மற்றும் வருவாய்த் துறையினா் எழுப்பிய ஆட்சேபனையின் பேரில் கடந்த ஆண்டு அவா்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனா்.