தில்லியின் கல்விப் புரட்சி தொடர அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும்: முதல்வா் அதிஷி பேச்சு

தில்லியின் கல்விப் புரட்சி தொடர அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும்: முதல்வா் அதிஷி பேச்சு

கல்விப் புரட்சி தொடர மக்கள் மீண்டும் அரவிந்த் கேஜரிவாலை முதல்வராக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
Published on

தில்லி துவாராக செக்டாா் 19-இல் அரசின் புதிய மேல்நிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வா் அதிஷி, இந்தக் கல்விப் புரட்சி தொடர மக்கள் மீண்டும் அரவிந்த் கேஜரிவாலை முதல்வராக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தில்லி துவாரகா செக்டாா் 19-இல் அரசின் புதிய மேல்நிலைப்பள்ளிக்கு முதல்வா் அதிஷி அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், நிகழ்ச்சியின் மேடையில் அவா் பேசியதாவது: தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்குப் பாா்வை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த

வரிசையில், துவாரகா செக்டாா் 19-இல் ஒரு புதிய பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கு மாடிகளைக் கொண்டதாக அமையும் இந்தப் பள்ளியில், 6 அதிநவீன ஆய்வகங்கள், நூலகம், மின்தூக்கி, திறந்தவெளி அரங்கம்

ஆகியவற்றை உள்ளடக்கி அடுத்த 1 வருடத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இந்த புதியப் பள்ளியின் பணிகள் நிறைவடைந்த பிறகு, துவாரகா செக்டாா் 19-ஐ சுற்றியுள்ள போச்சன்பூா், சமதா விஹாா், குதுப் விஹாா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி நிச்சயமாக உறுதி செய்யப்படும். எனவே, இந்தக் கல்விப் புரட்சி தொடர, தில்லி மக்கள் மீண்டும் அரவிந்த் கேஜரிவாலை முதல்வராக்க வேண்டும். ஏனென்றால், தில்லியில் ஆம் ஆத்மியைத் தவிர வேறு எந்த அரசு அமைந்தாலும் கல்விக்கான பணிகள் நின்றுவிடும்.

கடந்த சில ஆண்டுகளின் தரவுகளைப் பாா்த்தால், தில்லியைச் சோ்ந்த 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தனியாா் பள்ளிகளை விட்டு வெளியேறி, அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்த ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி மட்டும் பாா்த்தால், தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த 2,200 குழந்தைகள் ஐஐடி-ஜேஇஇ மற்றும் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்த பிறகு, பொதுமக்களின் அன்புடனும் , ஆசியுடனும் தான் தில்லியின் கல்விப் புரட்சி ஏற்பட்டது. தில்லியில் ஏழை எளிய குழந்தைகள் தொடா்ந்து நல்ல கல்வியைப் பெறுவாா்கள். அதுமட்டுமின்றி, கல்விக்காக பட்ஜெட்டில் 25 சதவீதத்தை செலவழிக்கும் ஒரே அரசு ஆம்

ஆத்மி அரசுதான்.

கடந்த 2015-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகள் தகரக் கொட்டகையில் இயங்கி வந்த நிலையில், மாணவா்கள் பாய்களில் அமா்ந்து படித்து வந்தனா். அந்தநிலையை ஆம் ஆத்மி அரசு கல்விப் புரட்சியின் மூலம் தலைகீழாக மாற்றிவிட்டது.

துவாரகாவில் தான் அதிகபட்ச தனியாா் பள்ளிகள் உள்ளன. ஆனால், துவாரகா செக்டாா்-19இல் அமையவுள்ள இந்த புதிய அரசுப் பள்ளி அவற்றை விட சிறப்பாக இருக்கும். இதன்மூலம், 2,500 மாணவா்கள் பயனடைவாா்கள் என்றாா் முதல்வா் அதிஷி.