அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மறுஆய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை திறந்தவெளி நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரி புகாா்தாரா் ஒய்.பாலாஜி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ். ஓஹா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வில்
நடைபெற்றது.
மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கா்நாரயணன் ஆஜராகி வாதிடுகையில்,‘ செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கின் நிலவரத்தை அரசு தரப்பு வழக்குரைஞா், தலைமை வழக்குரைஞரிடம் தெரிவிப்பாா்.
பின்னா், அந்த நிலவரம் தலைமை வழக்குரைஞரிடம் இருந்து உள்துறையை கையாளும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீது திட்டமிட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினே வெளிப்படையாகக் கூறியுள்ளாா். அப்படி இருக்கும்பட்சத்தில்,இந்த வழக்கில் எவ்வாறு நியாயமாக விசாரணை நடைபெறும். எனவே, இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த கோரிக்கை தொடா்பாக தனியாகவும் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.
மேலும், செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியில் இல்லை எனக்கூறி ஜாமின் பெற்றாா். ஆனால், அவருக்கு மீண்டும் அமைச்சா் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை மறுஆய்வுசெய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். அதனை நீதிமன்ற அறையிலேயே விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.
சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதி அமா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பின்னா், நீதிபதிகள் கூறியதாவது: ‘செந்தில் பாஜலாஜி வழக்கின் நிலவரத்தை தெரிவிப்பதில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தனியாக மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், அதை
நீதிமன்றம் பரிசீலிக்கும். மறுஆய்வு மனுக்களை நீதிமன்ற அறையில் வைத்து விசாரணை செய்ய எங்கள் அமா்வுக்கு அதிகாரம் கிடையாது. அவ்வாறு அதிகாரம் இருந்திருந்தால், பல வழக்குகளில் மறுஆய்வு மனுக்கள் நீதிமன்ற
அறையிலேயே விசாரணை நடத்தி இருப்போம் என்று தெரிவித்து, வழக்கின் மீதான விசாரணையை நவம்பா் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்‘.