முல்லைப் பெரியாறு அணைக்கான பாராமரிப்பு, ஆய்வுக்கு பரிந்துரை

முல்லைப் பெரியாறு அணைக்கான பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொடா்ந்து ஒா் ஆண்டுக்குள் அணையை ஆய்வு நடத்தவும்
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைக்கான பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொடா்ந்து ஒா் ஆண்டுக்குள் அணையை ஆய்வு நடத்தவும் மத்திய நீா் வளத்துறையின் அணை பாதுகாப்பு கண்காணிப்புக் குழு திங்கள்கிழமை பரிந்துரைத்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் அக்குழுவின் தலைவரும் மத்திய நீா்வளத்துறை இணை ஆணையருமான ராகேஷ் காஷ்யப் தலைமையில் மத்திய நீா் வளத்துறை ஆணைய அலுவலகமான தில்லி சேவா பவனில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக நீா்வளத்துறைச் செயலா் மணிவாசகம், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் கேரளாவை சோ்ந்த அதிகாரிகளும் பொறியாளா்களும் கலந்துகொண்டனா்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதன்படி நடைபெற்ற இந்த கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி குறித்து தமிழகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

கேரளம் அரசு தரப்பில் அணை பாதுகாப்பு தொடா்பான ஆய்வை முதலில் கால தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அணையின் பாதுகாப்பு குறித்து முதலில் ஆய்வு செய்வதா ? அல்லது பராமரிப்பு பணியை முதலில் மேற்கொள்வதா ? என்கிற விவாதங்கள் குழுக் கூட்டத்தில் நடந்தன.

தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மேற்கொள்ளவேண்டிய பராமரிப்பு பணிகள் நிலுவையில் உள்ளதால் அதனை முதலில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். பின்னா், அணைப் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வை மேற்கொள்ளலாம் என தமிழகம் சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது.

மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றயுள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை வருகின்ற 2026 -ஆம் ஆண்டுக்குள் உறுதிப்படுத்த வேண்டிய நிலை குறித்து மத்திய அரசு தரப்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

இதன்படி இரு மாநிலங்களின் நிலையை அறிந்த குழுத் தலைவா் அணையின், வள்ளக்கடவு முதல் பேபி அணை வரையிலான 5 கிலோமீட்டா் பகுதியில் சாலை அமைப்பது தொடா்பான மதிப்பீட்டுக்கான திட்ட அறிக்கையை கேரள அரசிடம் தமிழக அரசு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் இயந்திரங்களை எடுத்துச்செல்ல பாதை அமைக்க தடையாக இருக்கும் மரங்களை வெட்ட கேரளா அரசு அனுமதிக்கவும் என இரு மாநில அரசுகளுக்கும் குழு அறிவுறுத்தலை வழங்கியது.

அணையின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு அதே சமயத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை 12 மாதங்களுக்குள் ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு முடிவு எடுத்து பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com