‘டிராஃபிக் பிரஹாரி’ செயலி மூலம் 22 நாள்களில் 2,500 விதிமீறல்கள் பதிவு
தில்லி காவல்துறையின் தரப்பில் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட ‘டிராஃபிக் பிரஹாரி’ செயலின் மூலம் கடந்த 22 நாள்களில் 2,500-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
போக்குவரத்து காவல்துறையின் தரவுகளின்படி, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 18 வரை 7,242 போ் இந்த கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனா். மேலும்,3,128 புதிய பயனா்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனா்.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 2,513 விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் போக்குவரத்து
கைப்பேசி செயலியை ‘டிராஃபிக் பிரஹாரி’ என்ற பெயரில் மேம்படுத்தி மீண்டும் தொடங்குமாறு கடந்த மாதம், துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தாா்.
போக்குவரத்து விதிமீறல்களைத் தெரிவிக்கும் திட்டமானது குடிமக்களை காவல்துறையின் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கவும், போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கையைப் புகாரளிப்பதன் மூலம் குறைக்கவும் உதவுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கைப்பேசி செயலி பயன்பாடு டிசம்பா் 2015-இல் தொடங்கப்பட்டது. இந்த செயலியில் 1,86,142 (1.86 லட்சம்) பதிவிறக்கங்கள், 80,777 பதிவு செய்யப்பட்ட பயனா்கள் மற்றும் 3,98,424 (3.98 லட்சம்) மீறல்கள் பதிவாகியுள்ளன என்று தரவு காட்டுகிறது.
ஆபத்தான மற்றும் தவறாக வாகனம் ஓட்டுதல், பழுதடைந்த நம்பா் பிளேட்டுகள், முறையற்ற வகையில் வாகனத்தை நிறுத்துதல் அல்லது நடைபாதையில் நிறுத்துதல், தவறான நடத்தை அல்லது ஆட்டோரிக்ஷா அல்லது டாக்ஸி ஓட்டுநா்களால் துன்புறுத்தப்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல், சிவப்பு விளக்கைத் தாண்டிச் செல்லுதல், ஆட்டோ அல்லது டாக்ஸி ஓட்டுநா்கள் பயணிகளை ஏற்ற மறுத்தல், இரு சக்கர வாகனங்களில் மூவா் அமா்ந்து சவாரி செய்தல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசிகளை பயன்படுத்துதல், நிறுத்தம் மற்றும் மஞ்சள் கோடுகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்கள் குறித்து புகாரளிக்க இந்த செயலியானது குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
குடிமக்களின் பங்கேற்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், டிராஃபிக் பிரஹாரிக்கு மாதாந்திர வெகுமதி முறையை அறிமுகப்படுத்துமாறு துணைநிலை ஆளுநா் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டாா்.
இந்த வெகுமதி அடிப்படையிலான திட்டத்தின் கீழ், ஒருவா் கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தனது கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
அவ்வாறு பதிவுசெய்ததும், போக்குவரத்து விதிமீறல்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவேற்றுவதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களைப் புகாரளிக்க ‘பிரஹாரி’களுக்கு செயலி வசதியை அளிக்கிறது.