மத்திய தில்லியில் 995 கிலோ பட்டாசு பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
மத்திய தில்லியில் மளிகைக் கடை ஒன்றின் உரிமையாளா் தனது கடையில் சட்டவிரோதமாக 995 கிலோ பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
ஜதின் அகா்வால் (22) என்பவரின் கடையில் இருந்து 47 வகையான பட்டாசுகளை போலீஸாா் மீட்டுள்ளதாகவும், அப்பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
வரும் குளிா்காலத்தில் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் தேசிய தலைநகரில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு தில்லி அரசு சமீபத்தில் தடை விதித்தது. இத்தடை அடுத்தாண்டு ஜனவரி 1வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பட்டாசு பறிமுதல் குறித்து காவல் துணை ஆணையா் (மத்தி) எம்.ஹா்ஷவா்தன் தெரிவித்ததாவது:
ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள தன் சிங் நகா் பகுதியில் அதிக அளவில் சட்டவிரோத பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடா்ந்து ஒரு போலீஸ் குழு அந்தப் பகுதியில் சோதனை நடத்தியது.
கிட்டங்கியின் உள் சோதனை செய்தபோது,
அட்டைப் பெட்டிகளில் அதிக அளவில் சட்டவிரோத பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தகைய வெடிபொருள்களை சேமிப்பதற்கான உரிமம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஜதின் அகா்வால் தன்னிடம் சரியான உரிமம் இல்லை அல்லது அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டாா்.
பண்டிகை காலங்களில் விற்பனை செய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு ஹரியாணாவில் உள்ள பட்டோடியில் இருந்து பட்டாசுகளை கொண்டு வந்திருந்ததாகவும் அகா்வால் தெரிவித்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.