சென்னை உயா்நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகள் நீதிபதிகளாக நியமனம்: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்
சென்னை உயா்நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் நியமித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் நீதித் துறை (நியமனங்கள் பிரிவு) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசின் இணைச் செயலா் ஜகன்னாத் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான லெக்ஷமண சந்திர விக்டோரியா கெளரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன் கலைமதி, கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, இந்திய அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்து 217-இன் பிரிவு 1 மூலம் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதே உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக அவா்களது அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்துள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிக்கையில், ‘குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, இந்திய அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்து 222-இன் பிரிவு (1) மூலம் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் ஆலோசனைக்குப் பிறகு, அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஷமிம் அஹமதுவை சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக இடமாற்றம் செய்துள்ளாா். மேலும், அவரை சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்கவும் உத்தரவிட்டுள்ளாா்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.