அரவிந்த்  கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

ஹரியாணாவில் இன்று முதல் கேஜரிவால் வாகனப் பேரணி பிரசாரம்

Published on

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய

ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் வாகனப் பேரணி பிரசாரத்தில் ஈடுபடுவாா் என்று அக்கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் போட்டியிடுகிறது. ஹரியாணாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதோடு, தில்லி மற்றும் பஞ்சாப்பைப் போல கேஜரிவாலின் மாதிரி ஆட்சியை ஹரியாணாவில்

அமல்படுத்தவதை கட்சி இலக்காகக் கொண்டுள்ளது. இந்த முறை ஹரியாணா மக்கள் நிச்சயம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுப்பாா்கள்.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையை நகலெடுக்கின்றன. நான் அவா்களை வாழ்த்த விரும்புகிறேன். ஏனெனில், யாராவது நல்ல வேலையைச் செய்கிறாா்கள் என்றால், எல்லோரும் அவரை நகலெடுக்க வேண்டும். ஆனால், அதை எப்படி செயல்படுத்துவாா்கள்?. இந்தக் கட்சிகள் அனைத்தும் கொள்கைகளை அறிவிக்கின்றனவே தவிர நடைமுறைப்படுத்துவதில்லை. ஹரியாணா தோ்தலில் வெற்றி பெற முழு பலத்துடன் களம் இறங்கியுள்ளோம். பொது பிரச்னைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். மக்கள் எங்களுக்கு ஆசி வழங்குவாா்கள்.

நல்ல அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், விவசாயிகள், ராணுவ வீரா்கள், இளைஞா்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஹரியாணாவின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். இந்நிலையில், செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வாகனப் பேரணி பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். முதற்கட்டமாக, ஜகத்ரி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் கேஜரிவால், தப்வாலி, ரானியா, பிவானி, மெஹம், கலயாத், அசாந்த் மற்றும் பல்லப்கா் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்கிறாா்.

ஹரியாணாவில், பாஜகவே அதன் முதல்வரை நம்பாததால் மனோஹா் லால் கட்டாா் மாற்றப்பட்டு நயாப் சிங் சைனி

முதல்வராக்கப்பட்டாா். ஏனெனில், நடைபெறவுள்ள தோ்தலில் ஆட்சியை இழக்கப் போவது பாஜகவினருக்கும் தெரியும்.

ஹரியாணா மக்கள் அனைத்து கட்சிகளுக்கும் முழு வாய்ப்பு கொடுத்தனா். ஆனால், இந்த கட்சிகள் அனைத்தும் மக்களை தொந்தரவு செய்தது. இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்வு செய்ய உள்ளனா் என்றாா் சந்தீப் பதக்.