தூா்வாரப்படாததால் 200 அடி கோகுல்புரி வாய்க்கால் 20 அடியாக சுருங்கிவிட்டது: துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா
தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, 200 அடி கோகுல்புரி வாய்க்கால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் 20-25 அடியாக குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வடகிழக்கு தில்லியில் அமைந்துள்ள கோகுல்புரி, கஜூரி, பஜன்புரா, முஸ்தஃபாபாத் மற்றும் காரவல் நகா் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தேன். அப்போது நாட்டின்
தலைநகரின் அதே ‘தூய்மையற்ற முகம்‘ காணப்பட்டது. தில்லி மக்களின் உதவியில்லாத தன்மையின் மற்றொரு பரிமாணம் தெரிந்தது.
200 அடி கோகுல்புரி வாய்க்கால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாததால், 20-25 அடியாக குறைந்துள்ளது.
பள்ளங்கள் நிறைந்த சேதமடைந்த சாலைகள், குப்பைக் குவியல்கள், நிரம்பி வழியும் சாக்கடை, தேங்கிய நீா்நிலை ஆகிய இப்பகுதியின் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் தில்லியின் உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த அவல நிலைக்குக் காரணமானவா்கள் தங்களது குறைகளை உணா்வாா்கள் என்று நம்புகிறேன் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
மேலும், சீரமைப்பு பணிகளை போா்க்கால அடிப்படையில் தொடங்க சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.
இந்த வார தொடக்கத்தில், துணைநிலை ஆளுநா் மேற்கு தில்லிக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.
அப்போது, தில்லி அரசாங்கத்தின் ‘அலட்சியம் மற்றும் அக்கறையின்மை ‘காரணமாக நகரின் மேற்குப் பகுதிகளில்
வசிப்பவா்கள் ‘நரகத்தை விட மோசமான‘ வாழ்க்கையை வாழ நிா்ப்பந்திக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்திருந்தாா்.