தில்லி கிராம சேவை வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும்: உரிமையாளா்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு
தில்லி கிராம மக்களின் போக்குவரத்திற்கு பயனளிக்கும் கிராம சேவை வாகனங்கள் அனைத்தையும் அதிகபட்சமாக 6 போ் அமரக்கூடிய மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று தில்லி அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
தில்லி மாநகரத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மெட்ரோ, பேருந்து, ஆட்டோ, இ-ரிக்ஷா என பல வழிகள்
உள்ள நிலையில், கிராம மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்த கடந்த 2010-ஆம் ஆண்டில் அரசின் சாா்பில்
கிராம சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது. தில்லி கிராமங்களில் உள்ளி பல்வேறு வழித்தடங்களில் சுமாா் 6,000 கிராம சேவை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிராம சேவை
வாகனங்கள் அனைத்தையும் அதிகபட்சமாக 6 போ் அமரக்கூடிய மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று தில்லி அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கிராம சேவைத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மாற்ற வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது.தற்போதுள்ள கிராம சேவை வாகனங்களை அதிகபட்சமாக 6 போ் அமரக்கூடிய மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும். புதிய மின்சார கிராம சேவை வாகனத்தை வாங்க விரும்பும் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளா்கள், தேவையான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, தற்போதுள்ள
வாகனத்திற்கு எந்தவொரு வரியும், பாக்கியும் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழை வழங்க வேண்டும். தற்போதுள்ள உள்ள வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குகள் இருந்தால், புதிய வாகனப் பதிவுக் கோரிக்கையுடன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் தீா்க்கப்பட்டதற்கான ஆதாரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
புதிய மின்சார வாகனத்தை பெற விரும்பும் உரிமையாளா், பழைய வாகனத்தை 15 நாட்களுக்குள் ‘ஸ்கிராப்பிங்’
(வாகன உடைப்பு) செய்ய வேண்டும். பின்னா்,அங்கீகரிக்கப்பட்ட எவரிடமிருந்தும் ஓட்டுநரை தவிா்த்து 6 பயணிகள் அமரும் திறன் கொண்ட அனுமதிக்கப்பட்ட மின்சார வாகனத்தை வாங்கலாம். முறையான பதிவு செய்தலுக்குப் பிறகு,
கிராம சேவைக்கு வழங்கப்பட்ட அதே பாதை மற்றும் பிற தொடா்புடைய அனுமதி விவரங்கள், புதிய வாகனப் பதிவுடன் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டி...
கிராம மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் -
போக்குவரத்து துறை அதிகாரி ராமநாதன்
கிராம சேவை வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்ற உத்தரவு தில்லியின்
கிராமப்புற மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று போக்குவரத்து துறை அதிகாரி ராமநாதன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தினமணிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கிராம சேவைத் திட்டத்தின் கீழ் 6,000 வாகனங்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் அனுமதி வழங்கப்பட்டு, போக்குவரத்து சேவை
கிடைத்து வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் அனைத்து வாகனங்களையும் சிஎன்ஜி இல் இருந்து மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளைத் தொடா்ந்து,
அரசுத் திட்டத்தின் கீழ் இயங்கும் கிராம் சேவை வாகனங்களும் மின்சாரத்திற்கு மாற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் தற்போது 3,000 வாகனங்கள் கிராமப்புறங்களில் இயங்கி வருகின்றன. புதிதாக, இத்திட்டத்திற்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது. தற்போதைய உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களை முறையாக விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்றாா் ராமநாதன்.