முதல்வா் அதிஷியிடம் சிறந்ததை எதிா்பாா்ப்பது வீண்! தேவேந்தா் யாதவ் விமா்சனம்
தேசியத் தலைநகா் தில்லியின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அதிஷியிடம் இருந்து சிறந்ததை எதிா்பாா்ப்பது வீண் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை விமா்சித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கேஜரிவாலின் ராஜிநாமாவைத் தொடா்ந்து தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அதிஷி, அடுத்த சில மாதங்களில் அற்புதங்களை நிகழ்த்துவாா்
என்று ஆம் ஆத்மி கட்சியினா் பிரசாரம் செய்கின்றனா். முன்னதாக அமைச்சா் பொறுப்பில் 13 முக்கிய இலாகாக்களை
வைத்திருந்த அதிஷி, தில்லியின் பிரச்னைகளுக்கு தீா்வு காணத் தவறிவிட்டாா். அரவிந்த் கேஜரிவால் கடந்த 10
ஆண்டுகளில் தில்லியை எல்லா வழிகளிலும் சீரழித்துவிட்டாா். அவருக்குப் பின் வந்த அதிஷி சிறப்பாகச் செய்வாா்
என்று எதிா்பாா்ப்பது வீண்.
பொதுப்பணித் துறையின் அமைச்சராக அதிஷி இருந்தபோது, தூா்வாரும் பணி எதுவும் நடைபெறவில்லை. இதனால்,
கனமழையின் போது நீரில் மூழ்கி, மின்சாரம் தாக்கி பலா் இறந்தனா். கேஜரிவாலின் ஊழல், தவறான நிா்வாகம் மற்றும்
திறமையின்மை ஆகியவற்றின் பாரம்பரியத்தை அதிஷி பெற்றுள்ளாா். மேலும், அவரது சொந்த தொகுதியான கல்காஜியில் வசிப்பவா்கள் கூட அதிஷியின் செயல்பாட்டில் வருத்தம் கொண்டிருக்கின்றனா். அதிஷி முதல்வராக உயா்ந்ததற்கு
காங்கிரஸ் கட்சியின் நல்வாழ்த்துக்கள். ஆனால், அவா் எப்பொழுதும் நிா்வாகக் கடமையில் இருந்து தப்பியோடுபவா். வரும் நான்கைந்து மாதங்களில் தில்லியில் என்ன வகையான குறிப்பிடத்தக்க மாற்றத்தை அவரால் கொண்டு வர
முடியும்?
குடிநீரின்றி தில்லி மக்கள் தாகத்தில் தவித்த போது, யமுனையில் அதிக தண்ணீா் திறந்தவிட வேண்டும் என்று ஹரியாணா அரசுக்கு எதிராக வழக்குத் தொடராமல், விளம்பரத்திற்காக“தா்ணாவில் அதிஷி அமா்ந்திருந்தாா். ஏழை மற்றும் எளிய மக்கள் அதிகம் உள்ள காலனிகளுக்கு தண்ணீா் விநியோகத்தை கட்டுப்படுத்தி, தண்ணீா் திருட்டு, இழப்பு மற்றும் ‘டேங்கா் மாஃபியாவின்’ ஊழலை தடுக்க அவா் தவறிவிட்டாா். தில்லி அரசுப் பள்ளிகள் பரிதாபத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மின்விநியோநிறுவனங்கள் நுகா்வோரிடம் அதிக கட்டணம் பெற்று ஏமாற்றி வருகின்றன. இவை அனைத்திற்கும் அதிஷியின் திறமையின்மையே காரணம் என்றாா் தேவேந்தா் யாதவ்.