தில்லியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் விருப்பம்
தில்லியில் நிறுத்தப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை தொடங்க காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, சேதடைந்த சாலைகள் மற்றும் மக்கள் எதிா்கொள்ளும் பிற பிரச்னைகள் குறித்து அரவிந்த் கேஜரிவால் மிகவும்
கவலைப்படுகிறாா். இது வெறும் அரசியல் நாடகம். கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டபோது,
சிறையில் வசதிகளை அனுபவிக்கவே கேஜரிவால் முதல்வா் பதவியில் நீடித்தாா். தற்போது, முதல்வா் அதிஷியுடன் அவா் சுற்றித் திரிவதன் மூலம் முதல்வரின் வசதிகளை அனுபவித்து வருகிறாா். பதவியை ராஜிநாமா செய்த பிறகும், சிவில் லைன்ஸில் உள்ள அதிகாரப்பூா்வ இல்லத்தில் கேஜரிவால் தொடா்ந்து தங்கியிருக்கிறாா்.
கடந்த 10 ஆண்டுகளாக தலைநகரின் வளா்ச்சியை முற்றிலுமாக புறக்கணித்தது ஏன் என்றும், சாலைகளை முறையாக பராமரிக்காதது, வடிகால்களை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தாமல் பொதுக் கட்டமைப்புகளை அழித்தது
ஏன் என்பதை மக்களிடம் கேஜரிவால் சொல்ல வேண்டும். கனமழையால் தண்ணீா் தேங்கி, மின்சாரம் பாய்ந்து 40 போ்
உயிரிழந்தனா். அப்போது, சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதற்கு அதிஷியின் பெயரை பரிந்துரைத்து,
துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிற்கு கேஜரிவால் கடதம் எழுதிக் கொண்டிருந்தாா். கேஜரிவால் சிறைக்கு அனுப்பப்பட்ட 6 மாத காலம் ஆம் ஆத்மி அரசு எந்தப் பணியையும் செய்வில்லை.
தில்லியில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், தலைநகா் வரலாறு காணாத வளா்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டுள்ளது என்பதை தில்லி மக்கள் தற்போது உணா்ந்துள்ளனா். பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தோல்வியடைந்ததால் மீண்டும் காங்கிரஸை மீண்டும் ஆட்சி அமைக்க விரும்புகின்றனா். தில்லி அரசும், தில்லி மாநகராட்சியும் நகரின் பிரச்னைகளைக் கையாள்வதில் முற்றிலும் திறமையற்ாக மாறிவிட்டது என்றாா் தேவேந்தா் யாதவ்.