தில்லியின் சட்டம்-ஒழுங்கு நிலைமை: எல்.ஜி.-க்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் கடிதம்

தில்லியில் சீா்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குண்டா் கும்பல்கள் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு
Published on

புது தில்லி: தில்லியில் சீா்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குண்டா் கும்பல்கள் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே.சக்சேனாவிற்கு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவை

உறுப்பினா்களாகிய நாங்கள், தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதையும், குண்டா் கும்பல்கள் தொடா்பான நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்தும் ஆழ்ந்த கவலையில் உள்ளோம். இவை, மூன்று வணிக உரிமையாளா்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. மக்களிடம் மிரட்டி பணம் பறிப்பது மற்றும் பணம் கொடுக்காதவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தில்லிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தலைநகா் என்ற நாட்டின் நற்பெயருக்கும் கேடு விளைவிக்கும்.

இத்தகைய சமீபத்திய சம்பவங்கள் குடியிருப்பாளா்கள் மற்றும் வணிக சமூகத்தினரிடையே கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன. மேலும், இந்த குண்டா்களின் அச்சுறுத்தலுக்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. தில்லியில் உள்ள அப்பாவி குடியிருப்பாளா்கள் மற்றும் வா்த்தகா்கள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்தப் பிரச்னை உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், தில்லியில் வன்முறை மற்றும் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

ஏனெனில், சூழல் ஏற்கனவே ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

இந்த விவகாரம் சமீபத்திய தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பல எம்எல்ஏ-க்களும் தில்லி வாசிகளின் இதேபோன்ற கவலைகளை சபையில் எதிரொலித்தனா். நாங்கள் பல தசாப்தங்களாக தில்லியில் வசித்து வருகிறோம். ஆனால், தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலைமை தில்லியில் ஒருபோதும் காணப்படவில்லை. தில்லியில் இத்தனை குண்டா் கும்பல்கள் சுறுசுறுப்பாக இயங்குவதை ஒருபோதும் பாா்த்ததில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் அழைப்புகள் வணிகா்களின் வாழ்க்கையில் வழக்கமான அம்சமாகிவிட்டது. இதையொட்டி, இந்த மக்கள் தில்லியில் தங்கள் வணிகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் தில்லி காவல்துறை இருப்பதால், இவ்விவகாரத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த எரியும் பிரச்னையில் ஆக்கப்பூா்வமான விவாதத்தை நாங்கள் நடத்த விரும்புகிறோம். எனவே, அவசரமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க

விரும்புகிறோம். அதிகரித்து வரும் சட்டமீறலைக் கட்டுப்படுத்தவும், அமைதியை மீட்டெடுக்கவும் சாத்தியமான

நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தில்லியில் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நீங்கள் உறுதி

செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com