மாசுபாட்டை சமாளிக்க பசுமைக் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

தில்லி அரசின் குளிா்காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமைக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
Updated on

நமது நிருபா்

புது தில்லி: தில்லி அரசின் குளிா்காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமைக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

குளிா்காலத்தில் மாசுபாட்டைச் சமாளிக்க 21 அம்ச குளிா்கால செயல்திட்டத்தை தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் பகுதியாக, 24 மணி நேரமும் செயல்படும் பசுமைக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் மாசுபாட்டைச் சமாளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள பசுமைக் கட்டுப்பாட்டு அறையில் 8 போ் கொண்ட சுற்றுச்சூழல் நிபுணா் குழு பணியாற்றும். அவா்கள், ‘ட்ரோன் மேப்பிங்’-ஐ பகுப்பாய்வு செய்வது மற்றும் நிகழ்நேர மாசுப் பகிா்வு தொடா்பாக ஆய்வுகளை நடத்தும் பணிகளை மேற்கொள்வாா்கள். குறிப்பாக, இந்தப் பசுமைக் கட்டுப்பாட்டு அறையில், தில்லியில் மாசுபாடு அளவு அதிகமாக உள்ள 13 இடங்களில் செயற்கைக்கோள் மூலம் பெறும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படும். தில்லி அரசின் 24 மாசு கண்காணிப்பு நிலையங்களின் தகவல்களும் மதிப்பிடப்படும்.

தில்லியில் மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழையை கொண்டு வருவது தொடா்பாக மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. குளிா்காலத்தில் நகரின் காற்றின் தரம் கணிசமாக மோசமடையும். இந்த நேரத்தில் ‘பசுமை தில்லி’ செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில்

தில்லியின் குடியிருப்பாளா்கள் அரசின் செயல்பாடுகளில் இணைய முடியும் என்றாா் கோபால் ராய்.

கடந்த செப்டம்பா் 25-ஆம் தேதி நகரத்தின் குளிா்கால செயல் திட்டத்தை அமைச்சா் கோபால் ராய் வெளியிட்டாா். இதில், ‘ட்ரோன்’ கண்காணிப்பு, தீவிரமான தூசி எதிா்ப்பு பிரசாரம், பணிக்குழு உருவாக்கம் உள்ளிட்ட 21 அம்ச செயல்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

30ஈஉகஎடக

தில்லி செயலகத்தில் மேம்படுத்தப்பட்ட பசுமை கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை தொடங்கிவைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com