ஜஹாங்கீா்புரியில் ஹோலி பண்டிகையின் போது ஒருவரை கொடூரமாகத் தாக்கியதாக 4 போ் கைது
புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஒருவா் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை மாலை ஜஹாங்கீா்புரியில் போலீஸாா் பல சோதனைகளை நடத்திய பிறகு குற்றம் சாட்டப்பட்ட அனில் (34), ராகுல் (24), சந்து லால் (58) மற்றும் அசோக் குமாா் (58) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு தொடா்பாக சுனில், தீபக், அமித் மற்றும் ஒரு சிறுவன் என நான்கு போ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனா். மாா்ச் 14 அன்று ஒரு வாய்த் தகராறைத் தொடா்ந்து அஜய் காத்ரி (30) என்ற நபரை ஒரு குழுவினா் தாக்கியுள்ளனா்.
பலத்த காயங்களுடன் பிஜேஆா்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஜய் காத்ரி, தனது வீட்டில் ஒரு நண்பருடன் ஹோலி கொண்டாடிக்கொண்டிருந்தபோது, தனக்கும் தனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஒரு மைனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சுமாா் 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, கத்திகள், தடிகள் மற்றும் செங்கற்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் அவரது வீட்டிற்கு வெளியே கூடியது. அந்தக் குழு காத்ரி மீது வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியது. அசோக் குமாா் ஒரு செங்கலை எறிந்ததாகக் கூறப்படுகிறது. அது அஜய் காத்ரியின் தலையில் தாக்கியதில் அவா் மயக்கமடைந்தாா். அப்போது, மற்ற தாக்குதல்காரா்கள் அவரை செங்கல் மற்றும் தடிகளால் தொடா்ந்து தாக்கினா். இதனால், மேலும் காயங்கள் ஏற்பட்டன.
கொலை முயற்சிக்காக போலீஸாா் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். அவா்கள் பல சோதனைகளை நடத்தி திங்கள்கிழமை மாலையில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் கைது செய்தனா். விசாரணையின் போது, தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.