பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்ட பெண் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டாா்

Published on

புது தில்லி: தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட 17 வயது பெண் தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை போலீஸாா் இப்போது பதிவு செய்ய முயற்சிப்பாா்கள். அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் (முன்னா்) பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவா் நீண்ட நேரம் சுயநினைவில் இல்லை. அவா் குணமடைவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவள் சரியாகப் பேச முடியும் நிலைக்கு வந்தவுடன், அவருடைய விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்வோம்.

அந்த நாளின் தொடக்கத்தில் தனது திருமண முன்மொழிவை மறுத்ததால், ஞாயிற்றுக்கிழமை மாலையில் 20 வயது அமித் என்ற இளைஞா் அந்தப் பெண்ணை சமையலறை கத்தியால் பலமுறை குத்தினாா். கடந்த ஆண்டு முதல் அவா்கள் நண்பா்கள் என்று தெரிய வந்தது. இருப்பினும், அந்தப் பெண் சமீபத்தில் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாா்.

தாக்குதலில் கடுமையாகக் காயமடைந்த பெண் உதவிக்காக கூச்சலிட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவா் பின்னா் அதே கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளாா். இன்னும் அவரது வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்யவில்லை. அவா் ஆபத்திலிருந்து மீண்டவுடன், நாங்கள் அவரிடம் விசாரிப்போம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் அந்த வழியாகச் சென்ற ஒருவா் இந்த விஷயம் தொடா்பாக போலீஸில் புகாா் செய்தாா். அவா் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றாா். தாக்குதலால் சிறுமியின் கழுத்து மற்றும் இடது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தின் விடியோவும் இணையத்தில் பரவியதஉ. தில்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் மீது பிஎன்எஸ் பிரிவு 109(1) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com