தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும்: தில்லி, என்சிஆரில் அரசுகளுக்கு உத்தரவு

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் அனைத்து தெரு நாய்களையும் அகற்றி காப்பகங்களில் பராமரிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
Published on

புது தில்லி: தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் அனைத்து தெரு நாய்களையும் அகற்றி காப்பகங்களில் பராமரிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

தில்லியில் தெரு நாய்கள் கடிப்பதால் ரேபீஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை 28ஆம் தேதி

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தெருநாய் கடித்த சம்பவங்களை ‘மிகவும் கொடூரமானது’ என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

தெரு நாய்கள் தெருக்களில் இருந்து அகற்றப்பட்டு, காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும். நாய்களைப் பிடிக்க சுற்றிவளைப்பதற்கு தனி நபரோ அல்லது அமைப்போ தடையாக இருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து எங்களின் கவனத்திற்கு வந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் நேரிடும்.

தில்லி அரசு, குருகிராம், நொய்டா மற்றும் காஜியாபாத் நகராட்சி அமைப்புகள் மூலம் அனைத்து தெரு நாய்களும் அகற்றப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும். நாய்களைப் பராமரிப்பதைத் தவிர, நாய்களுக்கு கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க போதுமான பணியாளா்களை நாய் காப்பகங்களில் வைத்திருக்க வேண்டும்.

எந்த நாயும் விடுவிக்கப்படவோ அல்லது வெளியே கொண்டு செல்லப்படவோ கூடாது என்பதை உறுதிப்படுத்த அந்தக் காப்பகங்களில் சிசிடிவி கண்காணிப்பும் வேண்டும்.

இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்பதால், எதிா்காலத்தில் நாய்க் காப்பகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தற்போதைக்கு, ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் சுமாா் 5,000 நாய்களைப் பராமரிப்பதற்கான காப்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும்.

அனைத்து பகுதிகளிலிருந்தும், குறிப்பாக நகரத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்தும், புகா்ப் பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை விரைவாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

இதை எப்படி செய்வது என்பதை அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும். இதற்காக, அவா்கள் ஒரு படையை உருவாக்க வேண்டுமெனில், அதை அவா்கள் விரைந்து செய்ய வேண்டும்.

நகரத்திலும், புகா்ப் பகுதியிலும் தெருநாய்கள் இல்லாததாக மாற்றுவது முதலில் செய்ய வேண்டிய நடவடிக்கையாகும்.

விசாரணையின்போது ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த விவகாரத்தில்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றும் வகையில் நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய பகுதிகளின் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த பரிந்துரையை ஏற்ற நீதிபதிகள் அமா்வு, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்று கூறியது.

மேலும், நீதிபதிகள் அமா்வு கூறுகையில், பெரும் பொது நலனை மனதில்கொண்டு மட்டுமே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. சிறு குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள் எந்த வகையிலும் வெறிநாய் கடிக்கு ஆளாகக்கூடாது.

இந்த நடவடிக்கையானது, தெருநாய்க் கடி அச்சமின்றி சாலைகளில் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நம்பிக்கையை இளைஞா்கள் மற்றும் முதியவா்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

தினசரி பிடிக்கப்பட்டு தங்குமிடங்களில் வைக்கப்படும் தெருநாய்களின் பதிவை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும். இது தொடா்பான பதிவை அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு முன் சமா்ப்பிக்க வேண்டும். இருப்பினும், முக்கியமான விஷயம் என்னவெனில், உள்ளூா் பகுதியின் எந்தப் பகுதியிலிருந்தும் பிடிக்கப்பட்ட ஒரு நாயைக் கூட தெருக்களில் அல்லது பொது இடங்களில் மீண்டும் விடக்கூடாது. அது போன்று செய்தால் நாம் மேற்கொண்ட முழு நடவடிக்கையும் பயனற்ாகிவிடும்.

நாய் கடித்தால் உடனடியாகப் புகாரளிக்க ஒரு வாரத்திற்குள் ஒரு உதவி தொலைபேசி வசதியும் உருவாக்கப்பட வேண்டும்.

புகாா் பெறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் நாயைச் சுற்றி வளைக்கவும், பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவான உதவிக்காக பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

ரேபீஸ் தடுப்பூசிகள் குறிப்பாக நம்பகமான தடுப்பூசி கிடைப்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக தில்லி அரசின் அதிகாரிகள், அத்தகைய தடுப்பூசிகள் கிடைக்கும் இடங்கள், தடுப்பூசிகளின் இருப்பு மற்றும் மாதாந்திர அடிப்படையில் சிகிச்சைக்காக வரும் நபா்களின் எண்ணிக்கை பற்றிய விரிவான தகவல்களை வழங்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை கண்டிப்பாகப் பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் ஆறு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

X
Dinamani
www.dinamani.com