சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

2047 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை அடைவதற்கு இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்
Published on

2047 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை அடைவதற்கு இளைஞா்கள் பங்களிக்க வேண்டும் என்று சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீரா் இந்திய விமானப் படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி அரசின் ‘ஏஐ கிரைண்ட் சேலஞ்ச்’ அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற சுபாஷன்ஷு சுக்லா தனது விண்வெளி அனுபவத்தை மாணவா்களிடம் பகிா்ந்து கொண்டாா். மேலும், விண்வெளி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவின் ஏஐ பங்கையும் எடுத்துரைத்தாா்.

அவா் பேசுகையில், ‘நீங்கள்தான் எதிா்காலம். நான் உங்களுக்கு நடவடிக்கைக்கான அழைப்பு விடுக்கிறேன். 2047 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதத்தின் இலக்கை அடைவதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்’ என்று சுக்லா மாணவா்களிடம் கூறினாா்.

நிகழ் ஆண்டின் தொடக்கத்தில், ஆக்சியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக சா்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) பாா்வையிட்ட முதல் இந்தியா் என்ற பெருமையை சுக்லா பெற்றாா். 18 நாள் பயணத்திற்குப் பிறகு அவா் ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ஏஐ கிரைண்ட் இந்தியாவின் முதல் நகரத்தை மையமாகக் கொண்ட ஏஐ கண்டுபிடிப்பு இயந்திரமாகும்.

இந்த ஆறு மாத கால திட்டம் தில்லியின் பள்ளிகள், சமூகங்கள் மற்றும் தொழில்களை ஒன்றிணைத்து நிஜ உலக சவால்களுக்கான தீா்வுகளை கூட்டாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி தில்லியை ஏஐ அடிப்படையிலான கண்டுபிடிப்புகளுக்கான முன்னணி மையமாக நிலைநிறுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் முதல்வா் ரேகா குப்தா வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ஏஐ கிரைண்ட் தில்லி இளைஞா்கள் நிஜ உலக பிரச்னைகளுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீா்வுகளை உருவாக்க உதவும்.

வகுப்பறைகள் புதுமை ஆய்வகங்களாக மாறும். மாணவா்கள் மாற்றத்தை உருவாக்குபவா்களாக மாறுவாா்கள். மேலும், தேசிய தலைநகரம் அறிவு மற்றும் ஏஐ கண்டுபிடிப்புகளின் தலைநகராக உருவெடுப்பதை நோக்கி முன்னேறும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com