‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’: துவாரகாவில் 130 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தல்
புது தில்லி: தில்லியின் துவாரகா பகுதியில் ஒரு மாதமாக நடைபெற்ற காவல் துறையின் ‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’ நடவடிக்கையின் கீழ் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 130 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (துவாரகா) அங்கித் சிங் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்களில் பலா் காலவதியான விசாவுடன் வாடகை வீடுகளில் சட்டவிரோதமாக வசித்து வந்தனா்.
இது தொடா்பாக 25-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 26 வழக்குகளும் வெளிநாட்டினா் சட்டத்தின் கீழ் 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
நாடு கடத்தப்படுபவா்களில் நைஜீரியா்கள் (87 போ்), ஐவரி கோஸ்ட் (11 போ்), கேமரூன் (10 போ்), கானா (10 போ்), செனகல் (4 போ்), லைபீரியா (3 போ்), சியரா லியோன் (2 போ்), உகாண்டா (2 போ்), மற்றும் கினியாவைச் சோ்ந்த ஒருவா் ஆகியோா் அடங்குவா் என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
