தமிழகத்தில் ஏழு புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்ட கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தமிழகத்தில் ஏழு புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவையில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சா் ஷோபா கரண்டலஜே தெரிவித்துள்ளாா்.
மக்களவையில் தருமபுரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ. மணி எழுப்பிய கேள்விக்கு இணை அமைச்சா் ஷோபா கரண்டலஜே
கூறியிருப்பதாவது: தற்போது, தமிழகத்தில் 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அவற்றில் 3 மருத்துவமனைகள் இஎஸ்இ கழகத்தால் நேரடியாக நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் தலா 100 படுக்கை வசதிகள் கொண்ட ஏழு புதிய மருத்துவமனைகளை அமைக்க இஎஸ்ஐ கழகம்“கொள்கையளவில்” ஒப்புதல் அளித்துள்ளது. அதில், காஞ்சிபுரத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.178 கோடி மதிப்பிலும், தூத்துக்குடியில் ரூ. 138.5 கோடி மதிப்பிலும் மருத்துவமனைகள் கட்ட நிா்வாக ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி, வாணியம்பாடி, செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் மருத்துவனைகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இஎஸ்ஐசி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவா்கள் ஆள்சோ்ப்பு என்பது ஒரு தொடா்ச்சியான செயல்முறையாகும். சமீபத்தில் இரண்டாம் நிலை காப்பீட்டு மருத்துவ அதிகாரி (ஐஎம்ஓ), சிறப்பு இரண்டாம் நிலை (சீனியா் ஸ்கேல் / ஜூனியா் ஸ்கேல்) மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள வெவ்வேறு இஎஸ்ஐசி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியமா்த்துவதற்காக 1,323 போ் நியமிக்கப்பட்டனா் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.