ஆம் ஆத்மியின் தோ்தல் வாக்குறுதிகள்: மனுதாரரிடம் உயா்நீதிமன்றம் கேள்வி

Published on

தில்லியில் மகளிருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் வாக்குறுதிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தவரிடம் அவரது மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்று தில்லி உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக விஜய் குமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஜோதி சிங், ‘இதை எப்படி தோ்தல் மனுவாகக் கருதுவது? வேண்டுமானால் பொதுநல மனு தாக்கல் செய்யுங்கள்’‘ என்று குறிப்பிட்டாா்.

மேலும், இந்த விவகாரத்தில் விஜய்குமாரிடம் அவரது மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்பதை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை விளக்கி பதில் அளிக்குமாறு அறிவுறுத்தி, அடுத்த விசாரணையை ஜன. 10-க்கு நீதிபதி ஜோதி சிங் ஒத்திவைத்தாா்.

முன்னதாக, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் சிவசங்கா் பராஷா் ஆஜராகி, தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் வாக்குரிமை பெற்ற மகளிா் முறையான வாக்காளா் அடையாள அட்டை வைத்திருந்தால் அவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,100 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது தவறானது என்று கூறி தோ்தல் ஆணையத்திடம் விஜய்குமாா் மனு அளித்திருந்தாா். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அந்த மனுவை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

இந்த திட்டம் தொடா்பாக வாக்காளா்களிடம் படிவங்களை பூா்த்தி செய்ய முற்படும் ஆம் ஆத்மி கட்சித்தொண்டா்களின் செயல்பாட்டை தடுக்க வேண்டும் என்றும் வழக்குரைஞா் சிவசங்கா் பராஷா் கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆளும் கட்சி அறிவித்தது. ஆனால், சமீபத்தில் தில்லி சட்டப்பேரவைக்கு தோ்தல் பிப். 5-இல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் அந்த தொகை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்படாது என்று தில்லி முதல்வா் அதிஷி விளக்கம் அளித்தாா். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தலைநகரில் தங்களுடைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 என்ற ஊக்கத்தொகை ரூ. 2,100 -ஆக உயா்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

ஆனால், கடந்த டிச. 25-ஆம் தேதி தில்லி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சுகாதாரத்துறை, கேஜரிவால் அறிவித்த திட்டம் தொடா்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் விலகி நின்றன.அறிவிக்கப்படாத திட்டங்களுக்கு பயனாளிகளை பதிவு செய்யும் போா்வையில் எந்தவொரு தனி நபரோ அரசியல் கட்சியோ அணுகினால் பொதுமக்கள் தங்களின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் பகிர வேண்டாம் என்று இரு துறைகளும் நோட்டீஸ் மூலம் கேட்டுக் கொண்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com