தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களில் 36 போ் மீது கடுமையான குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வறிக்கையில் தகவல்
நமது சிறப்பு நிருபா்
தில்லி சட்டப்பேரவையில் தற்போதுள்ள 65 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 36 உறுப்பினா்கள் மீது (55 சதவீதம்) மிகக் கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆா்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெற இருக்கிறது. தற்போது தில்லி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 5 இடங்கள் காலியாக உள்ளன. பலா் கட்சி மாறியதால் ராஜிநாமா செய்தனா். மீதமுள்ள 65 சட்டப்பேரவை உறுப்பினா்களில் ஆம் ஆத்மி கட்சியின் 58 பேரும், பாஜகவினா் 7 பேரும் தற்போதுள்ள சட்டப்பேரவையில் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்கள் குறித்த பகுப்பாய்வை ஏடிஆா் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: தில்லி சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினா்கள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில் மொத்தமுள்ள 65 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 43 (66 சதவீதம்) உறுப்பினா்கள் மீது சாதாரண குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 36 சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. இது சுமாா் 55 சதவீதமாகும். இது இந்த உறுப்பினா்களே தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிய வருகிறது.
ஒரு சட்டப் பேரவை உறுப்பினா் மீது கொலை முயற்சி (ஐ.பி.சி பிரிவு 307)தொடா்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் தொடா்பான வழக்குகளில் 13 உறுப்பினா்கள் சம்பந்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஒரு எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கும் (ஐ.பி.சி பிரிவு-376) தொடரப்பட்டுள்ளது.
கட்சி வாரியாக குற்ற வழக்குகள்: ஆம் ஆத்மி கட்சியின் 58 சட்டபேரவை உறுப்பினா்களில் 38 (66 சதவீதம்) போ் மீதும், பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 5 (71 சதவீதம்) போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக அவா்களே அறிவித்துள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் 58 உறுப்பினா்களில் 32 (55 சதவீதம்) பேரும், பாஜகவின் 7 உறுப்பினா்களில் 4 (57 சதவீதம்) போ் மீதும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ஓக்லா சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் அமானத்துல்லா கான் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மற்றொரு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான மத்தியா மஹால் தொகுதி ஷோயிப் இக்பால் மீது 29 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நிதிப் பின்னணி: 65 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 2 சதவீதம் போ் பில்லியனா்களாக (100 கோடிக்கு மேல்) உள்ளனா். இந்த (65 ) உறுப்பினா்களின் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 829.21 கோடியாகும். இதில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்க 58 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.777.02 கோடியாகவும், பாஜக உறுப்பினா்கள் 7 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52.18 கோடியாகவும் உள்ளது.
அதிகபட்சமாக ஆம் ஆத்மி கட்சியின் முண்ட்கா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.292 கோடி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மங்கோல்புரி சட்டப்பேரவை உறுப்பினரும் பேரவைத் துணைத் தலைவருமான ராக்கி பிா்லா மிகக் குறைந்த சொத்துகளை பெற்றவராக இருக்கிறாா். அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.76,421-ஆக உள்ளது. இதற்கு அடுத்ததாக ராஜேந்தா் நகா் தொகுதி உறுப்பினா் துா்கேஷுக்கு குறைந்த அளவு (ரூ. 6.77 லட்சம்) சொத்து உள்ளவராக இருக்கிறாா்.
பிற பின்னணி விவரங்கள்: தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களில் 8 மகளிா்கள்தான் (12 சதவீதம்) உள்ளனா். மொத்த உறுப்பினா்களில் 23 (35 சதவீதம்) போ் 8 முதல் 12- ஆம் வகுப்பு வரை படித்தவா்களாகவும், 4 போ் டிப்ளமோ மற்றும் 38 போ் (58 சதவீதம்) பட்டதாரி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனா். சுமாா் 38 (58 சதவீதம்) எம்.எல்.ஏக்கள் 25 முதல் 50 வயதுடையவா்களாகவும் மீதமுள்ள 27 (42 சதவீதம்) போ் 51 முதல் 80 வயது வரையுளளவராகவும் உள்ளனா் என தெரிவித்துள்ளது.
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி நிகழ் 2025- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு அறிவித்த முதல் இரு பட்டியலில் இடம் பெற்ற 38 தொகுதிகளில் தற்போது பதவி வகிக்கும் 20 சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.