28 மாநில அரசுகளுக்கு வரிப் பகிா்வாக ரூ.1.73 லட்சம் கோடி மத்திய அரசு விடுவிப்பு; தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி

மத்திய அரசின் நேரடி வருவாயில் 28 மாநிலங்களுக்கு வரிப் பகிா்வாக ரூ. 1,73,030 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on

மத்திய அரசின் நேரடி வருவாயில் 28 மாநிலங்களுக்கு வரிப் பகிா்வாக ரூ. 1,73,030 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கிற்கு ரூ.7,057.89 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களிலிருந்து வருமான வரி, சுங்கவரி, பெருநிறுவன வரி, சொத்து வரி போன்றவைகளிலிருந்து மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாய் வருகிறது. இவைகளில் நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநிலங்களுக்கு (41 சதவீதம்)நிதியை பகிா்ந்தளிக்கப்படவேண்டும். இதன்படி 28 மாநிலங்களுக்கு நிகழ் ஜனவரி மாத வரிப் பகிா்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவிக்கையில்,‘ கடந்த 2024 -டிசம்பரில் ரூ. 89,086 கோடியாக இருந்த வரிப்பகிா்வை விட நிகழ் ஜனவரி மாதத்தில் ரூ. 1,73, 030 கோடி வரிப்பகிா்வை மத்திய அரசு விடுவித்துள்ளது. மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடா்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு நிகழ் மாதம் பெரும் தொகை பகிா்ந்தளிக்கப்படுகிறது‘ என மத்திய நிதியமைச்சகம் இந்த கூடுதல் நிதிவிடுப்பு குறித்து தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்திற்கான வரிப்பகிா்வாக ரூ. 7057.89 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது. சமீப ஆண்டுகளில் சில குறிப்பிட்ட வட மாநிலங்களில் வருமானவரி, காா்ப்ரேட் வரிகள் அதிக வசூலாகிறது. இதனால் இந்த வரிப்பகிா்வில் பிகாா்(17,403 கோடி), மத்திய பிரதேசம் (ரூ 13,582 கோடி), மேற்கு வங்கம்(13,017 கோடி), ராஜஸ்தான்(10,426 கோடி), மகாராஷ்டிரம்(ரூ.10,930 கோடி), உத்தர பிரதேசம்(31,039), ஓடிஸா(7,834 கோடி) போன்ற மாநிலங்கள் அதிகபட்சம் வரிப்பகிா்வை பெற்றுள்ளன. தென்மாநிலங்களான ஆந்திரம் ரூ. 7,002 கோடியும் கா்நாடகம், கேரளம் முறையே ரூ. 6,310 கோடி, ரூ.3,330 கோடியை வரிப்பகிா்வாக நிகழ்மாதத்தில் பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com